புகையிலை நிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டி ரூ.1¾ லட்சம் கொள்ளை 6 பேருக்கு வலைவீச்சு


புகையிலை நிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டி ரூ.1¾ லட்சம் கொள்ளை 6 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 9 Dec 2018 10:15 PM GMT (Updated: 9 Dec 2018 9:29 PM GMT)

திருவையாறு அருகே புகையிலை நிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டி ரூ.1¾ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருவையாறு,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் புகையிலை நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் தஞ்சை சோழன் நகரை சேர்ந்த அப்துல்லத்தீப் (வயது37) என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று கும்பகோணத்தில் இருந்து சரக்கு வேனில் புகையிலையை ஏற்றிக்கொண்டு அரியலூர் சென்றார். சரக்கு வேனை திருவிடைமருதூரை சேர்ந்த அஜ்ஜீமுகமது என்பவர் ஓட்டினார். உதவியாளர் முருகன் என்பவரும் சரக்கு வேனில் இருந்தார்.

அரியலூரில் உள்ள கடைகளில் புகையிலையை விற்பனை செய்து விட்டு அப்துல்லத்தீப் உள்பட 3 பேரும் சரக்கு வேனில் திருவையாறு வழியாக கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். திருவையாறு அருகே உள்ள புனல்வாசல் பஸ் நிறுத்தம் பகுதியில் சரக்கு வேன் சென்று கொண்டிருந்தபோது ஒரு காரும், 2 மோட்டார்சைக்கிளும் சரக்கு வேனை வழிமறித்தது.

அவற்றில் வந்த 6 பேரை கொண்ட கும்பல், சரக்கு வேனில் இருந்த விற்பனையாளர் அப்துல்லத்தீப்பை அரிவாளால் வெட்டினர். இதில் அவருக்கு கையில் படுகாயம் ஏற்பட்டது. இதனால் ரத்தம் சொட்டிய நிலையில் அலறி துடித்த அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்தை 6 பேரும் கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுகுறித்து டிரைவர் அஜ்ஜீமுகமது, உதவியாளர் முருகன் ஆகிய 2 பேரும் திருவையாறு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு குலசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் ஆர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் தஞ்சையை சேர்ந்த தடயவியல் நிபுணர் பாலசுப்பிரமணியன் மற்றும் குழுவினர் சம்பவம் நடந்த பகுதியில் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். மோப்பநாய் பப்பியின் உதவியுடன் துப்பு துலக்கப்பட்டது. சம்பவ இடத்தை மோப்பமிட்ட மோப்பநாய் பப்பி, சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஓடிச்சென்று அங்கிருந்த பாலத்தின் தடுப்புச்சுவர் அருகே சிறிது நேரம் நின்று விட்டு திரும்பி வந்து விட்டது.

அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த அப்துல்லத்தீப், திருவையாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, புகையிலை நிறுவன விற்பனையாளரை தாக்கி ரூ.1¾ லட்சத்தை கொள்ளையடித்த 6 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் திருவையாறு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story