காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ‘திடீர்’ தள்ளிவைப்பு பெலகாவி சுவர்ண சவுதாவில் 18-ந் தேதி நடக்கிறது
நேற்று முன்தினம் நடைபெறுவதாக இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் திடீரென தள்ளிவைக்கப்பட்டது. இந்த கூட்டம் வருகிற 18-ந் தேதி பெலகாவி சுவர்ண சவுதாவில் நடைபெற உள்ளது.
பெங்களூரு,
நேற்று முன்தினம் நடைபெறுவதாக இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் திடீரென தள்ளிவைக்கப்பட்டது. இந்த கூட்டம் வருகிற 18-ந் தேதி பெலகாவி சுவர்ண சவுதாவில் நடைபெற உள்ளது.
எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி
கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்-மந்திரியாக குமாரசாமியும், துணை முதல்-மந்திரியாக பரமேஸ்வரும் உள்ளனர். அதே நேரத்தில் மந்திரிசபையில் 7 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் 6 இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணி ஆட்சி அமைந்து 6 மாதங்கள் ஆகியும் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படாததால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய கோரி காங்கிரஸ் தலைவர்களை எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு தாவவும் திட்டமிட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில் கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், முதல்-மந்திரி குமாரசாமி தன்னிச்சையாக முடிவு எடுப்பதாகவும், அரசு மூத்த அதிகாரிகள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு மதிப்பளிப்பதில்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளை எம்.எல்.ஏ.க்கள் கூறி வருகின்றனர்.
18-ந் தேதி நடக்கிறது
இதையடுத்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்த மூத்த தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர். மேலும் இன்று(திங்கட் கிழமை) பெலகாவியில் தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்பாக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்தார்கள். அதன்படி, நேற்று முன்தினம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அந்த கூட்டம் திடீரென்று ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையில், பெலகாவி சுவர்ணசவுதாவில் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி வருகிற 21-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடை பெறுமா? என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் போதே எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நடத்த காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் பெலகாவி சுவர்ணசவுதாவில் வருகிற 18-ந் தேதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் சந்திக்கும் பிரச்சினைகள், மந்திரிசபை விரிவாக்கம் உள்ளிட்டவை குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
குமாரசாமி கலந்து கொள்கிறார்
ஏற்கனவே தன் மீது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் குற்றச்சாட்டு கூறி வருவதால், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு, அவர்களது பிரச்சினைகளை நேரில் பேசி தீர்க்க முதல்-மந்திரி குமாரசாமி முடிவு செய்தார். இதுதொடர்பாக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில தலைவர் தினேஷ் குண்டுராவுடன் குமாரசாமி அனுமதி கேட்டார். அவர்களும் அனுமதி அளித்திருந்தனர்.
இதனால் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொள்ள உள்ளார். அப்போது எம்.எல்.ஏ.க்கள் கூறும் குற்றச்சாட்டுகளை பேசித்தீர்க்கவும், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை சுமுகமாக முடித்து வைக்கவும், சமாதானப்படுத்தவும் குமாரசாமி தீர்மானித்துள்ளார்.
Related Tags :
Next Story