மோட்டார் சைக்கிள் கால்வாய்க்குள் பாய்ந்தது; தொழிலாளி பலி ஆரல்வாய்மொழி அருகே பரிதாபம்


மோட்டார் சைக்கிள் கால்வாய்க்குள் பாய்ந்தது; தொழிலாளி பலி ஆரல்வாய்மொழி அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 9 Dec 2018 10:45 PM GMT (Updated: 9 Dec 2018 10:03 PM GMT)

ஆரல்வாய்மொழி அருகே மோட்டார்சைக்கிள் கால்வாய்க்குள் பாய்ந்தது. இதில் தொழிலாளி பரிதாபமாக பலியானார்.

ஆரல்வாய்மொழி,

குலசேகரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 45). தச்சுத்தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயா(35). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் ஆரல்வாய்மொழி அருகே தாழக்குடி ஆசாரிமார் தெருவில், வசித்து வந்தனர். இந்தநிலையில் 3 ஆண்டுகளுக்கு முன் ஆறுமுகம் கேரளாவில் உள்ள ஒரு எஸ்டேட்டுக்கு வேலைக்கு சென்றார். ஆனால் அவர் மனைவி மற்றும் குழந்தைகள் தாழக்குடியிலேயே வசித்து வந்தனர்.

அவர் மாதத்திற்கு ஒரு முறை விடுமுறையில் வந்து மனைவி குழந்தைகளை பார்த்து விட்டு செல்வது வழக்கம். 3 மாதங்களுக்கு முன்பு மனைவி, குழந்தைகளை பார்க்க ஊருக்கு வந்த ஆறுமுகம் அதன்பிறகு கேரளாவுக்கு வேலைக்கு செல்லவில்லை.

இந்தநிலையில் ஆறுமுகம் நேற்று இரவு மீண்டும் கேரளாவுக்கு வேலைக்கு செல்ல திட்டமிட்டு இருந்தார். தாழக்குடியில் இருந்து வெள்ளமடம் செல்லும் சாலையில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. அந்த கடையின் முன்பு நாஞ்சில் புத்தனாறு கால்வாய் செல்கிறது. மாலை 5.30 மணிக்கு ஆறுமுகம், வீட்டில் இருந்து வெள்ளமடம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, கால்வாயில் குளித்துக் கொண்டிருந்த வீரபுத்திரனிடம் மோட்டார்சைக்கிளை ஆறுமுகம் இரவல் வாங்கிக்கொண்டு டாஸ்மாக் கடையை நோக்கி ஓட்டி சென்றார்.

மோட்டார்சைக்கிளுடன் சென்ற ஆறுமுகத்தை வெகு நேரம் ஆகியும் காணவில்லை. இந்தநிலையில், அந்த வழியாக வந்தவர், சிறிது தூரத்தில் மோட்டார்சைக்கிள் ஒன்று கால்வாய்க்குள் பாய்ந்தது. அதில் இருந்தவரை சிலர் மீட்டு கரையில் படுக்க வைத்திருப்பதாக கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வீரபுத்திரன், அங்கு விரைந்து சென்று பார்த்தார். அப்போது, கால்வாய் கரையோரம் ஆறுமுகம் கரையில் கிடந்தார். மோட்டார் சைக்கிள் கால்வாய்யோரத்தில் உள்ள புதர்களுக்கிடையே கிடந்தது. உடனே, 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது. அதில் வந்த ஊழியர்கள் ஆறுமுகம் உடலை பரிசோதித்து பார்த்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உடனே இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெயலெட்சுமி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆறுமுகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story