அ.தி.மு.க.வை அழிக்க விரும்பவில்லை: ‘எங்களுக்கு எதிரி தி.மு.க. தான்’ தங்க தமிழ்செல்வன் பேட்டி


அ.தி.மு.க.வை அழிக்க விரும்பவில்லை: ‘எங்களுக்கு எதிரி தி.மு.க. தான்’ தங்க தமிழ்செல்வன் பேட்டி
x
தினத்தந்தி 9 Dec 2018 10:45 PM GMT (Updated: 9 Dec 2018 9:53 PM GMT)

‘அ.தி.மு.க.வை அழிக்க விரும்பவில்லை. எங்களுக்கு எதிரி தி.மு.க. தான்‘ என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் கூறினார்.

நெல்லை, 

தமிழகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அபார வளர்ச்சி பெற்று வருகிறது. எம்.ஜி.ஆரால் உருவாக்கி, ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட அ.தி.மு.க.வையும், இரட்டை இலையையும் அழிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு அ.தி.மு.க. எதிரி இல்லை. எங்களுக்கு எதிரி தி.மு.க. தான். நாங்கள் முதல்-அமைச்சரையும், சில அமைச்சர்களையும் மாற்றிவிட்டு ஜெயலலிதா ஆட்சி அமைக்க வேண்டும் என்று தான் கூறினோம். அதற்கு எங்களுடைய எம்.எல்.ஏ. பதவியை பறித்துவிட்டனர். இப்போதும் அதைத்தான் கூறுகிறோம். முதல் -அமைச்சரையும், சில ஊழல் அமைச்சர்களையும் மாற்றிவிட்டு, கட்சி பொறுப்பை கவனிக்க சொன்னால் அ.தி.மு.க.வுடன் இணைய தயாராக உள்ளோம்.

தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜனதா ஆகிய கட்சிகளின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். புதிய தலைமை வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான். மக்களின் ஆதரவு எங்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப வேண்டுமானால் டி.டி.வி.தினகரனால் மட்டுமே முடியும்.

நாங்கள் எப்போதும் பா.ஜனதாவுடன் கூட்டணி சேரமாட்டோம். நாங்கள் இடைத்தேர்தலில் தனித்து தான் போட்டியிடுவோம். கூட்டணிக்கு யார் வந்தாலும் அவர்களையும் சேர்த்துக்கொள்வோம். தமிழக அரசு தோல்வி பயத்தில் உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்து வருகிறது.

கஜா புயல் பாதிப்புக்கு ரூ.40 ஆயிரம் கோடி கேட்டிருக்க வேண்டும். அந்த அளவிற்கு அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு தமிழகத்திற்கு ரூ.350 கோடியை மட்டுமே ஒதுக்கி தமிழக அரசை அவமானப்படுத்தி உள்ளது. இதை துணிந்து கேட்க முதல்-அமைச்சருக்கு தைரியம் இல்லை. முதல்-அமைச்சர் மக்கள் பிரச்சினைக்காக டெல்லி சென்று பிரதமரை சந்திப்பது கிடையாது. தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காக தான் டெல்லி செல்கிறார்.

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 பேரை விடுதலை செய்தது துணிச்சலான முடிவு. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக கவர்னர், பிரதமரை சந்தித்ததாக கூறப்படுகிறது. அவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பது தான் நமது விருப்பம் ஆகும்.

இவ்வாறு தங்க தமிழ்செல்வன் கூறினார்.

பேட்டியின்போது, தென்மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜா, அமைப்பு செயலாளர் ஆர்.பி.ஆதித்தன், முன்னாள் துணை மேயர் ஜெகநாதன், மாவட்ட செயலாளர்கள் பாப்புலர் முத்தையா, சொக்கலிங்கம், கல்லூர் வேலாயுதம், பொருளாளர் பால்கண்ணன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பரமசிவ அய்யப்பன், வி.கே.பி.சங்கர், சிறுபான்மை பிரிவு பொருளாளர் ருசி அன்சார், பகுதி செயலாளர்கள் ஹைதர்அலி, அசன்ஜாபர்அலி, பேச்சிமுத்து, சுப்பையா மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story