திருச்செந்தூர்- ஸ்ரீவைகுண்டம் இடையே நீராவி என்ஜின் ரெயில் 3-வது முறையாக இயக்கம்
திருச்செந்தூர்- ஸ்ரீவைகுண்டம் இடையே நீராவி என்ஜின் ரெயில் நேற்று 3-வது முறையாக இயக்கப்பட்டது.
திருச்செந்தூர்,
இங்கிலாந்து நாட்டில் 1855-ம் ஆண்டில் இ.ஐ.ஆர்.21 மற்றும் இ.ஐ.ஆர்.22 என 2 நீராவி என்ஜின் ரெயில்கள் தயாரிக்கப்பட்டது. இவை 1857-ம் ஆண்டு இந்தியா கொண்டுவரப்பட்டது. இங்கு குறிப்பிட்ட ரெயில் வழித்தடங்களில் மட்டும் அவை இயக்கப்பட்டன. சுமார் 55 ஆண்டுகள் சேவைக்கு பிறகு இந்த நீராவி என்ஜின்கள் ஹவுரா மற்றும் ஜமால்பூரில் நிறுத்தப்பட்டன.
இதனையடுத்து தெற்கு ரெயில்வே நிர்வாகம் இ.ஐ.ஆர்.21 நீராவி என்ஜினை பராமரித்தது. பாரம்பரிய ரெயில் சேவை திட்டத்தில் நீராவி என்ஜின் மூலம் ஒரு ஏ.சி. பெட்டி இணைக்கப்பட்டு குறிப்பிட்ட வழித்தடங்களில் ஹெரிடேஜ் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.
தூத்துக்குடியில் கடந்த அக்டோபர் மாதம் 17-ந்தேதி மற்றும் கடந்த மாதம் 25-ந்தேதிகளில் ரெயில்வே பயணிகளை மகிழ்விக்க திருச்செந்தூர்- ஸ்ரீவைகுண்டம் இடையே ஹெரிடேஜ் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. அந்த ரெயில் 3-வது முறையாகவும், கடைசி வாய்ப்பாகவும் திருச்செந்தூர்- ஸ்ரீவைகுண்டம் இடையே நேற்று மாலை இயக்கப்பட்டது.
இந்த ரெயிலில் நெல்லை ரெயில்வே போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சிவசங்கர நாராயணன், திருச்செந்தூர் நிலைய மேலாளர் ஜேம்ஸ் திரவியம் மற்றும் பலர் பயணம் செய்தனர். திருச்செந்தூரில் இருந்து மாலை 3.15 மணிக்கு புறப்பட்ட ரெயில், மாலை 4.35 மணிக்கு ஸ்ரீவைகுண்டத்தை சென்றடைந்தது.
Related Tags :
Next Story