வீடு புகுந்து ரூ.50 லட்சத்தை திருடிச்சென்ற வழக்கு: கொள்ளையன் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு


வீடு புகுந்து ரூ.50 லட்சத்தை திருடிச்சென்ற வழக்கு: கொள்ளையன் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு
x
தினத்தந்தி 10 Dec 2018 4:00 AM IST (Updated: 10 Dec 2018 3:51 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில், வீடு புகுந்து ரூ.50 லட்சத்தை கொள்ளையடித்த வழக்கில் போலீஸ்காரரை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற கொள்ளையனை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர்.

பெங்களூரு,

பெங்களூருவில், வீடு புகுந்து ரூ.50 லட்சத்தை கொள்ளையடித்த வழக்கில் போலீஸ்காரரை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற கொள்ளையனை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர்.

ரூ.50 லட்சம் கொள்ளை

பெங்களூரு பசவேஸ்வரா நகரில் வசித்து வருபவர் கங்கய்யா. இவருடைய மகள் பெயர் பாக்யம்மா. இவர் பெங்களூரு ஸ்ரீகந்தகாவலில் உள்ள ஹெல்த் லே-அவுட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், கங்கய்யா புதிதாக ‘ரெசார்ட்’ வாங்க முடிவு செய்தார்.

இதற்காக அவர் கடந்த ஜூலை மாதம் 16-ந் தேதி காமாட்சிபாளையாவில் உள்ள வங்கியில் இருந்து ரூ.50 லட்சத்தை எடுத்தார். இந்த பணத்தை அவர் தனது மகள் பாக்யம்மாவின் வீட்டில் வைத்துவிட்டு தன்னுடைய வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில், மறுநாள் காரில் வந்த மர்மநபர்கள் பாக்யம்மாவின் வீட்டுக்குள் நுழைந்து சூட்கேசில் இருந்த ரூ.50 லட்சத்தை கொள்ளை யடித்துச் சென்றுவிட்டனர்.

13 பேர் கைது

இதுகுறித்து அன்னபூர்னேஸ்வரி நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மேலும் கொள்ளை வழக்கு தொடர்பாக மோகன் என்ற மனோகர்(வயது 27), ஸ்ருசா காரந்த்(44), லட்சுமி(35), வினோத்(21), கங்காதர்(21), யோகேஷ்(22), சந்தீப்(38), திலீப்(27), பாலகிருஷ்ணா(54), சவி(27), மஞ்சுநாத்(35), அப்துல் ரகுமான்(29), சிவக் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.12.30 லட்சம் ரொக்கம், 3 கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைதானவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின்போது முக்கிய குற்றவாளியான ராஜேஷ் என்பவர் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.

போலீஸ்காரர் மீது தாக்குதல்

இதையடுத்து, ராஜேசை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் அவரை வலைவீசி தேடிவந்தனர். இந்நிலையில், பெங்களூரு விசுவேஸ்வரய்யா லே-அவுட் 8-வது பிளாக்கில் ராஜேஷ் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு நேற்று அதிகாலையில் ரகசிய தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து, காலை 7 மணியளவில் தனிப்படை போலீசார் அங்கு சென்றனர். போலீசாரை பார்த்தவுடன் ராஜேஷ் தப்பித்து ஓடினார். அவரை போலீசார் விரட்டி சென்றனர். அப்போது ராஜேசை போலீஸ்காரர் மகேஷ் குமார் பிடிக்க முயன்றார். இதனால் கோபமடைந்த ராஜேஷ், போலீஸ்காரர் மகேஷ் குமாரின் கையில் கத்தியால் தாக்கிவிட்டு ஓட்டம் பிடித்தார்.

துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு

இதைப்பார்த்த போலீசார் சரண் அடையும்படி ராஜேசிடம் கூறினார்கள். ஆனால், அவர் சரண் அடையாமல் தொடர்ந்து ஓடினார். அவரை அச்சுறுத்த போலீசார் துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒரு முறை சுட்டனர். இருப்பினும் அவர் சரண் அடையாமல் ஓடியதோடு, போலீசாரை தாக்க முயன்றார். இதனால் பாதுகாப்பு கருதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரய்யா, ராஜேசை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அப்போது ராஜேசின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.

இதனால் அவர் சம்பவ இடத்திேலயே சுருண்டு விழுந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். கைதான ராஜேஷ் விக்டோரியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அத்துடன் தாக்குதலில் காயமடைந்த போலீஸ்காரர் மகேஷ்குமாரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story