திருப்பூர், கோவை தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அவினாசி அருகே சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டும் - ஈ.ஆர்.ஈஸ்வரன் பேட்டி


திருப்பூர், கோவை தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அவினாசி அருகே சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டும் - ஈ.ஆர்.ஈஸ்வரன் பேட்டி
x
தினத்தந்தி 10 Dec 2018 4:18 AM IST (Updated: 10 Dec 2018 4:18 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர், கோவை தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அவினாசி அருகே சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.

திருப்பூர்,

திருப்பூர், கோவை தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அவினாசி அருகே சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் அவினாசி ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட பொருளாளர் வேலுமணி, மாநகர் மாவட்ட துணை செயலாளர் தம்பிவெங்கடாச்சலம், மண்டல செயலாளர்கள் வேலுசாமி விஜயசாரதி, கனகராஜ், மாநகர இளைஞரணி செயலாளர் செல்வகுமார், மாநகர துணை செயலாளர்கள் தேவராஜ், கோல்டன் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாநில பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மேற்கு மண்டல இளைஞரணி செயலாளர் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். முன்னதாக மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருப்பூர் பின்னலாடை, ஜவுளி தொழில் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. வீழ்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. ஆனால் தொழில் முன்னேற்றத்தை கண்டுள்ளது என்று மத்திய அரசு சார்பில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. ஆயத்த ஆடை தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூரை பொறுத்தவரை போக்குவரத்து நெரிசல் என்பது மிகப்பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது.

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண தேவைக்கு ஏற்ப மேம்பாலம் கட்டப்படவில்லை. வளர்ச்சிக்கு இது மிக பெரும் தடையாக இருந்து வருகிறது. கேரள மாநிலத்தை போல திருப்பூர், கோவை உள்ளிட்ட தொழில் நகரங்களில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அவினாசிக்கு அருகில் சர்வதேச விமான நிலையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சில சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் முன்னேற துடிக்க வேண்டும். அதை விடுத்து விட்டு மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்களை இழிவாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு இளைஞர்களை தவறாக வழிநடத்தும் தலைவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். காவல்துறை இவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும். அ.தி.மு.க. வில் பணமும், பதவியும் தான் ஒரு கட்சியின் தலைமை போன்று உள்ளது. இந்த நிலையில் அ.தி.மு.க., அ.ம.மு.க. இணைவதற்காக ஒரு கல்லை தங்க தமிழ்செல்வன் போட்டுள்ளார்.

இவர்கள் இணைவதை யாரும் ஆச்சரியப்படுவதற்கில்லை. திருப்பூரில் வேறு மாநிலத்தை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூரில் இருந்து வேறு பகுதிகளுக்கு நேரடி ரெயில் போக்குவரத்து இல்லை. இதனால் வஞ்சிபாளையம் பகுதியில் இருந்து நேரடி ரெயில் போக்குவரத்து தொடங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



Next Story