கருணை இல்லத்தில் உள்ள தாயாரை மீட்டுதரக்கோரி கலெக்டரிடம் பள்ளி மாணவி மனு


கருணை இல்லத்தில் உள்ள தாயாரை மீட்டுதரக்கோரி கலெக்டரிடம் பள்ளி மாணவி மனு
x
தினத்தந்தி 10 Dec 2018 10:45 PM GMT (Updated: 10 Dec 2018 2:47 PM GMT)

கருணை இல்லத்தில் உள்ள தாயாரை மீட்டு தரக்கோரி கலெக்டரிடம் பள்ளி மாணவி மனு கொடுத்தார்.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுவது வழக்கம். இதுபோல் திங்கட்கிழமையான நேற்றும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் வாங்கினார்.

அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வெவ்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

மாணவி மனு

திருவிதாங்கோடு அண்ணாநகர் காலனியை சேர்ந்த சிவகுமார் (வயது 35). கட்டிடத்தொழிலாளி. இவருடைய மகள் ஐஸ்வரியா (வயது 10). பள்ளி மாணவியான இவர் நேற்று தனது தந்தை சிவகுமார், சகோதரன் பிரசன்னகுமார் (8), பாட்டி சுகுமாரி (49) ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தார். அந்த மனுவில் ஐஸ்வரியா கூறியிருப்பதாவது:–

 நாங்கள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். எனது தாயார் சபரீஸ்வரி (30) வீட்டில் இருந்து வெளியே சென்றவர் 7 நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை. எனது தந்தை, தாயாரை தேடி அலைவதால் நானும், எனது சகோதரனும் சாப்பிட உணவு கிடைக்காமலும், பள்ளி செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. தற்போது எனது தாயார் ஒரு கருணை இல்லத்தில் இருப்பதாக அறிந்தேன். எனவே தக்க நடவடிக்கை எடுத்து எனது தாயாரை மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.

நூல் நிலையத்தை            அகற்றக்கூடாது

விசுவ இந்து பரி‌ஷத் திருக்கோவில் திருமடங்கள் மாநில அமைப்பாளர் காளியப்பன் தலைமையில், இந்து முன்னணி முன்னாள் நிர்வாகி ராஜா மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நாகராஜா கோவிலின் கீழ் இயங்கி வரும் பாரம்பரியம் மிக்க பழமையான சித்ராநூல் நிலையத்தை அகற்றி, வடசேரி பஸ் நிலையத்துக்கு புதிய பாதை அமைப்பதற்கான திட்டத்தை நாகர்கோவில் நகராட்சி வகுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த பகுதியில் தனியார் ஆக்கிரமித்து வைத்திருக்கும் இடங்களை அகற்றினாலே புதிய பாதை அமைக்க தாராளமாக இடம் கிடைக்கும். எனவே பாரம்பரியம் மிக்க சித்ராநூல் நிலையத்தை அகற்றக்கூடாது. அதோடு சித்ரா நூல் நிலையத்தையொட்டி இருக்கும் கலையரங்கத்தையும் சீரான முறையில் பராமரித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். இந்துக்கோவில் சொத்துக்களை தாரை வார்க்கக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குப்பைக்கிடங்கு

ச.ம.க. நகர செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் நிர்வாகிகள் பலர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வலம்புரிவிளை குப்பைக்கிடங்கை பார்வதிபுரத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள ஆலம்பாறையை அடுத்த மலையடிவாரத்தில் அமைக்க வேண்டும். புதிய தொழில்நுட்ப முறையில் நகரப்பகுதியில் 11 இடங்களில் நகராட்சி அமைக்க திட்டமிட்டுள்ள குப்பபை கிடங்கு முறையும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே மலையடிவாரத்தில் புதிய தொழில்நுட்ப முறையில் குப்பைக்கிடங்கை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

டாஸ்மாக் மதுக்கடை

குமரி மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் நாகராஜன் தலைமையில் நிர்வாகிகள் ஜாண்சேவியர் உள்பட பலர் மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–

மிடாலம் அருகே உள்ள பெருமாங்குழி கிங்கினி குளக்கரையில் அமைந்துள்ள கட்டிடத்தில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது. இதன் அருகில் மக்கள் வழிபடும் சாஸ்தாகாவு வழிபாட்டுத்தலம் உள்ளது. இந்த இடத்தில் டாஸ்மாக் கடை அமைத்தால் விதிமுறை மீறலாக அமையும். எனவே குளத்தின் கரை அருகிலோ அல்லது பெருமாங்குழி பகுதியில் எந்த மதுபானக்கடையும் அமைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தூர்வாரவேண்டும்

நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிதம்பரலிங்கம் என்ற வீரபாண்டியன் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

கடந்த 3 மாதமாக பேச்சிப்பாறை அணை தண்ணீர் திக்கணங்கோடு கால்வாய் வாழியாக திறக்கப்பட்டும் செம்பொன்விளை, ஓலக்கோடு, முக்காடு, கறுக்கன்குழி, தாராவிளை, குஞ்சாவளை, ஒருமாவிளை, பெத்தேல்புரம் ஆகிய ஊர்களுக்கு தண்ணீர் வரவில்லை. இந்த கால்வாயில் குப்பையும், புற்களும் நிரம்பி அடைத்துள்ளது. எனவே இந்த கால்வாயை தூர்வாரி தண்ணீர் தங்குதடையின்றி வந்துசேர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்க தொண்டரணி மாவட்ட செயலாளர் ராஜ்குமார், புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் ஸ்டாலின் ஆகியோர் தனித்தனியாக கொடுத்துள்ள மனுக்களில்,

“நேர்மையான முறையில் பணியாற்றி வந்த சுசீந்திரம் கிராம நிர்வாக அலுவலர் பழிவாங்கும் நோக்கில் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரை மீண்டும் சுசீந்திரம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு பணி நியமனம் செய்ய வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.


Next Story