திருப்பத்தூர் அருகே பரிதாபம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் ஏட்டு சாவு மோட்டார் சைக்கிள்கள் மோதலில் கீழே விழுந்தவர் மீது லாரி ஏறியது


திருப்பத்தூர் அருகே பரிதாபம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் ஏட்டு சாவு மோட்டார் சைக்கிள்கள் மோதலில் கீழே விழுந்தவர் மீது லாரி ஏறியது
x
தினத்தந்தி 11 Dec 2018 4:00 AM IST (Updated: 10 Dec 2018 9:40 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் கீழே விழுந்தவர் மீது லாரி ஏறியதில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் ஏட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜோலார்பேட்டை,

திருப்பத்தூர் அருகே உள்ள சுந்தரம்பள்ளியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 43), ஜோலார்பேட்டை ரெயில்வே பாதுகாப்பு படையில் ஏட்டுவாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ஷாலினி. இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு செந்தில்குமார் திருப்பத்தூர் அருகே உள்ள அண்ணான்டப்பட்டி கூட்ரோடு என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது எதிரே திருப்பத்தூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த சிவா மகன் குமரேசன் (22) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திடீரென செந்தில்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதனால் 2 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி செந்தில்குமாரின் கால்கள் மீது ஏறி இறங்கியது.


இந்த விபத்தில் செந்தில்குமாரும், குமரேசனும் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செந்தில்குமாரை வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story