ஜல்லிக்கட்டு விதிமுறைகளை தளர்த்த வேண்டும் இளைஞர் பேரவையினர் கோரிக்கை


ஜல்லிக்கட்டு விதிமுறைகளை தளர்த்த வேண்டும் இளைஞர் பேரவையினர் கோரிக்கை
x
தினத்தந்தி 11 Dec 2018 4:30 AM IST (Updated: 10 Dec 2018 10:23 PM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டில் உள்ள கடுமையான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

நாமக்கல்,

தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையினர் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது :-

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். அதேபோல், இப்போட்டியில் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை தளர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பேட்ஜ் முறை அனைத்து துறைகளிலும், வீரர்களுக்கு தொந்தரவாக உள்ளது. இதனால் சிறந்த வீரர்களுக்கு ஜல்லிக்கட்டில் விளையாட வாய்ப்பு குறைவதுடன், முழுமையாக பங்கேற்க முடியவில்லை.

மேலும் அதிக காயம் ஏற்படுகிறது. அதாவது வீரர்கள், அடுத்த பேட்ஜில் தொடர வேண்டும் என்றால், இரண்டு மாடுகளை தழுவியிருக்க வேண்டும். அதனால், அனைத்து மாடுகளையும் பிடிக்க முயன்று காயம் ஏற்படுகிறது.

தமிழகத்தில், உள்ளூர் கோவில் திருவிழாவில் நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்துவது வழக்கம். 2 ஆண்டுகளாக மாட்டுக்கு அலங்காரம் மற்றும் மாலை அணிய மறுக்கப்பட்டு உள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளின் உயரத்தை பார்த்து அனுமதிப்பதை தவிர்த்து, காளையின் வயதை அறிந்து போட்டிக்கு அனுமதிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு விழாவை ஆண்டு தோறும் தொடர்ந்து நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை, தமிழக அரசே நடத்த வேண்டும். போட்டியில், அனைத்து காளைகளையும் அவிழ்க்க கால அவகாசம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story