எடப்பாடி அருகே 4 மாத குழந்தையை சுடுகாட்டில் வீசி சென்ற பெண் போலீசார் விசாரணை


எடப்பாடி அருகே 4 மாத குழந்தையை சுடுகாட்டில் வீசி சென்ற பெண் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 11 Dec 2018 5:15 AM IST (Updated: 10 Dec 2018 10:48 PM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி அருகே 4 மாத பெண் குழந்தையை அதன் தாய், சுடுகாட்டில் உள்ள முட்புதரில் வீசிசென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எடப்பாடி, 

சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த நெடுங்குளம் ஊராட்சி சிலுவம்பாளையம் சுடுகாட்டு பகுதியில் உள்ள முட்புதரில் நேற்று காலையில் ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. உடனே அந்த வழியாக சென்றவர்கள் முட்புதர் பகுதிக்கு சென்று பார்த்த போது, அங்கு பிறந்து 4 மாதங்களே ஆன பெண் குழந்தை ஒன்று அழுதபடி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அங்கிருந்தவர்கள் பூலாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று அந்த பெண் குழந்தையை மீட்டனர். பின்னர் சித்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அந்த குழந்தையை ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இதில் முதற்கட்டமாக அந்த குழந்தையை அதன் தாயே சுடுகாட்டில் வீசி சென்று இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இருப்பினும் அந்த குழந்தை யாருடையது? எதற்காக அந்த குழந்தையை சுடுகாட்டில் வீசி சென்றனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story