அ.தி.மு.க. கவுன்சிலர் கொலை வழக்கில்: முன்னாள் போலீஸ்காரர் உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை - தேனி மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டு தீர்ப்பு
தேனி அருகே அ.தி.மு.க. கவுன்சிலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் போலீஸ்காரர் உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
தேனி,
தேனி மாவட்டம் வீரபாண்டி போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் மந்திரி (வயது 57). இவர் தேனி ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலராக இருந்தார். அத்துடன் கோவையில் பத்திர எழுத்தராகவும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.
இவருடைய தங்கை தெய்வக்கனி மகன் ரமேஷ்குமார் (35). இவர் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவர் மீது கொலை மிரட்டல், பெண் கடத்தல் போன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால் பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் இவருக்கும், மந்திரிக்கும் இடையே சொத்துப் பிரச்சினை இருந்து வந்தது.
கடந்த 2015-ம் ஆண்டு சொத்துப் பிரச்சினையை சுமுகமாக பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறி மந்திரியை ரமேஷ்குமாரும், அவருடைய தந்தை கோடீஸ்வரனும் அழைத்துள்ளனர். இதை நம்பிய மந்திரி கோவையில் இருந்து லட்சுமிபுரம் வந்துள்ளார்.
அங்குள்ள ஒரு டீக்கடையில் ரமேஷ்குமார், அவருடைய தந்தை கோடீஸ்வரன் மற்றும் சிலர் மந்திரியுடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது ரமேஷ்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் மந்திரியை குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பலியானார்.
இந்த சம்பவம் குறித்து வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த வெங்கடாசலபதி விசாரணை நடத்தி, ரமேஷ்குமார், அவருடைய தந்தை கோடீஸ்வரன் (60), தாயார் தெய்வக்கனி (52), உறவினர்களான செல்வம் (57), அவருடைய மனைவி செல்வராணி (48), கோபிகண்ணன் (32), சந்திரா (29), மலைச்சாமி ஆகிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு நடந்துகொண்டிருந்த போதே மலைச்சாமி இறந்துவிட்டார்.
இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி சீனிவாசன் நேற்று தீர்ப்பு கூறினார். இதில் ரமேஷ்குமார், கோடீஸ்வரன், தெய்வக்கனி, செல்வம், செல்வராணி, கோபிகண்ணன், சந்திரா ஆகிய 7 பேருக்கும், ஆயுள் தண்டனையும் தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
இதையடுத்து தண்டனை பெற்ற அனைவரையும் போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story