மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி; எம்.எல்.ஏ. உள்பட உறவினர்கள் மறியல் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி; எம்.எல்.ஏ. உள்பட உறவினர்கள் மறியல் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 10 Dec 2018 11:00 PM GMT (Updated: 10 Dec 2018 7:38 PM GMT)

ஆலங்குடி அருகே மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலியானார்கள். இழப்பீடு கேட்டு எம்.எல்.ஏ. உள்பட இறந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மரங்கள் முழுவதும் சாய்ந்தன. வீடுகள், உடைமைகளை இழந்து, உணவு, குடிநீர், மின்சாரம் இன்றி பொதுமக்கள் தவித்தனர். இதையடுத்து பல்வேறு பகுதிகளில் இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் கொடுத்து வருகின்றனர். மேலும் பல்வேறு மாநிலம், மாவட்டங்களில் இருந்து மின் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு மின்சாரம் வழங்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் சில கிராமப்புறங்களுக்கு இன்னும் மின்சார வசதி கிடைக்கவில்லை. இதனால் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் குடிநீர் இன்றியும், கால்நடைகளுக்கு தண்ணீர் இல்லாமலும் அவதியடைந்து வருகிறார்கள். இதனால் கால்நடைகளுக்கு அருகில் உள்ள கிணறுகள் மற்றும் குட்டைகளுக்கு சென்று பொது மக்கள் தண்ணீர் எடுத்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அரையப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி சுசீலா (வயது 45). கருப்பன் குடியிருப்பு பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சக்திவேல் (22). டிப்ளமோ படித்துள்ளார். சுசீலாவும் சக்திவேலும் நேற்று காலை 7.30 மணிக்கு வீட்டில் வளர்த்து வந்த மாடுகளுக்கு தண்ணீர் எடுக்க அருகில் உள்ள விவசாய கிணற்றிற்கு குடங்களுடன் சென்றனர். அப்போது மோட்டார் பம்பு செட் அருகே மின் கம்பத்திலிருந்து மின்கம்பி அறுந்து தொங்கி கொண்டிருந்தது.

இதைபார்த்த சுசீலா, சக்திவேல் இருவரும் தங்கள் ஊருக்கு இன்னும் மின்சாரம் வரவில்லையே என நினைத்து மின்கம்பியை தொட்டனர். இதில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து சுசீலா, சக்திவேல் இருவரும் பரிதாபமாக இறந்தனர். இதையறிந்த அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் சுசீலா, சக்திவேல் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

இந்த தகவல் அறிந்த தி.மு.க. எம்.எல்.ஏ. மெய்யநாதன், அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் தனசேகரன் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் இறந்தவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தலா ஒருவருக்கு அரசு வேலையும், ரூ.10 லட்சமும் வழங்கக்கோரி ஆலங்குடி-அறந்தாங்கி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு அய்யனார், வருவாய் கோட்டாட்சியர் டெய்சி குமார், ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் ஆலங்குடி-அறந்தாங்கி சாலையில் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே ஆலங்குடி போலீசார் சுசீலா, சக்திவேல் ஆகிய 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து பெண் உள்பட 2 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மின்சாரம் பாய்ந்து 2 பேர் இறந்த சம்பவம் அறிந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்த அமைச்சர் விஜயபாஸ்கர் அரசு மருத்துவமனைக்கு வந்தார். பின்னர் அவர் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி தனது சொந்த பணத்தில் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கி, அவர்களது குடும்பத்தினர்களிடம் அரசு கொடுக்கும் நிவாரண தொகையை பெற்று தருவதாகவும் கூறினார்.

Next Story