வெளிநாடு சென்ற மகனை கண்டுபிடித்து தரக்கோரி தந்தை கலெக்டரிடம் மனு


வெளிநாடு சென்ற மகனை கண்டுபிடித்து தரக்கோரி தந்தை கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 11 Dec 2018 4:15 AM IST (Updated: 11 Dec 2018 1:34 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாடு சென்ற மகனை கண்டுபிடித்து தரக்கோரி கலெக்டரிடம் அவரது தந்தை மனு கொடுத்தார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலை வாய்ப்பு, வீட்டுமனை பட்டா, திருமண உதவி திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 373 மனுக்களை வழங்கினர்.

அரியலூரில் உள்ள நரிக்குறவ இன மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது:-

அரியலூரில் உள்ள குருவிக்காரன் குட்டை பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவ இன குடும்பங்கள் வசித்து வருகின்றோம். மழைக்காலங்களில் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்குவதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. மேலும் வடிகால் வசதி இல்லாததால் நாட்கணக்கில் தண்ணீர் தேங்கி நிற்கின்றன. கொசுக்கள் உற்பத்தியாகி குழந்தைகள் மற்றும் பெரியோர்களை கடிப்பதால் உடலில் தடிப்பு ஏற்படுகிறது. எனவே தங்களுக்கு வேறு இடத்தில் இலவச வீட்டு மனைபட்டா வழங்கி வீடு கட்டித்தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் அதில் கூறியிருந்தனர்.

இதேபோல் அரியலூர் மாவட்டம் தத்தனூர் குடிக்காட்டை சேர்ந்த பிச்சைப்பிள்ளை கொடுத்த மனுவில், எனது மகன் இளங்கோவன்(வயது 23). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்த தொழிலாளியாக சிங்கப்பூருக்கு சென்றார். வெளிநாடு சென்ற ஒரு சில மாதங்கள் மட்டுமே தொடர்பில் இருந்தார். அதன்பிறகு இதுவரை எனது மகன் எங்கு உள்ளார். எப்படி உள்ளார் என்ற விபரம் கிடைக்கவில்லை. இது குறித்து ஏஜென்டிடம் கேட்டபோது முன்னுக்கு பின் முரணாகவே கூறி வருகிறார். எனவே எனது மகனை கண்டுபிடித்து தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கீழவண்ணம் கிராம மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் சுமார் 350 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களது ஊர் மக்கள் குடிப்பதற்கு கொள்ளிடம் மூலம் குடிநீர் பெற்று வந்தோம். ஆனால் கடந்த 1 மாதமாக குடிநீர் கிடைக்காமல் மிகவும் அவதியுற்று வருகிறோம். இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் மிகவும் பாதிக்கின்றனர். இது குறித்து பல முறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறியிருந்தனர்.

தொடர்ந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 9 பயனாளிகளுக்கு ரூ.47 ஆயிரத்து 250 மதிப்பில் இலவச தையல் எந்திரங்களை கலெக்டர் வழங்கினார். பொதுமக்கள் அளித்த மனுக்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு உரிய பதிலை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் கொடுக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காத்திருக்காமல் அவர்களுக்கான தனி இருக்கையில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், சமூக பாதுகாப்பு துணை கலெக்டர் பூங்கோதை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story