கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிடை நீக்கம்: கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த 49 பேர் கைது


கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிடை நீக்கம்: கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த 49 பேர் கைது
x
தினத்தந்தி 11 Dec 2018 4:15 AM IST (Updated: 11 Dec 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிடை நீக்கம் தொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த 49 பேரை போலீசார் கைது செய்தனர்.

தாமரைக்குளம்,

அரியலூர் மாவட்டம் கருப்பூர் சேனாபதி கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர் ராயர். இவர் விடுமுறை தொடர்பாக அரியலூர் தாசில்தார் அலுவலகத்தில் துணை தாசில்தார் குருமூர்த்தியிடம் கடந்த 7-ந் தேதி கேட்டபோது பேச்சுவார்த்தை முற்றியது. அப்போது அருகில் இருந்த வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் தட்டிக்கேட்டபோது கைகலப்பாக மாறியது.

இந்நிலையில் ராயர் மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் பிரபாகரன் (வெங்கனூர்), சுபாஷ்சந்திரபோஸ் (குலமாணிக்கம்) ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து அரியலூர் கோட்டாட்சியர் சத்தியநாராயணன் உத்தரவிட்டார்.

நடந்த சம்பவம் என்ன என்பது குறித்து உரிய விசாரணை செய்யாமல் 3 கிராம நிர்வாக அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும், உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரியும் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு கொடுக்க தமிழ்நாடு கிராம நிர்வாக அதிகாரிகள் முன்னேற்றசங்கத்தை சேர்ந்த 10 பெண்கள் உள்பட 49 பேர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை உள்ளே செல்ல விடாமல் மறித்தனர். அனுமதி மறுத்ததால் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலின் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கலைந்து செல்ல கூறியபோது கலைந்து செல்ல மறுத்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இதனால் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story