போத்தனூர் பகுதியில்: கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணியை கைவிட கோரிக்கை - ரேஷன் கார்டுடன் வந்து பொதுமக்கள் மனு


போத்தனூர் பகுதியில்: கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணியை கைவிட கோரிக்கை - ரேஷன் கார்டுடன் வந்து பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 11 Dec 2018 3:30 AM IST (Updated: 11 Dec 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

போத்தனூர் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணியை கைவிடக்கோரி ரேஷன் கார்டுடன் வந்து பொதுமக்கள் மனு அளித்தனர்.

கோவை, 

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோவை சாய்நகர் மற்றும் சத்தியநாராயணா நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ஆர்.எம்.நஷார் தலைமையில் பொதுமக்கள் கைகளில் ரேஷன் கார்டுகளுடன் வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதா வது:-

கோவை போத்தனூரை அடுத்த சாய்நகர், சத்தியநாராயணா நகர் மற்றும் பாத்திமா உமர் அவென்யூ பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள நொய்யல் ஆற்றங்கரையில் பூங்கா அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடம் உள்ளது. இதில் குழந்தைகள் விளையாடியும், முதியவர்கள் மற்றும் பெண்கள் நடைபயிற்சி மேற்கொண்டும் வருகின்றனர். மேலும் உடற்பயிற்சிக்கான உபகரணங்கள் வாங்கப்பட்டு, ஏராளமானோர் உடற்பயிற்சி செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் இந்த இடத்தில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு தற்போது அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். தற்போது இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்தால் இந்த பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள், பெரியவர்கள் சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே தற்போது அமைக்கப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தால் மேலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். எனவே இந்த பணியை கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் சார்பில் மாவட்ட தலைவர் ரகுபுநிஸ்தார் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனுவில், கோவை 74 மற்றும் 75-வது வார்டுகளுக்குட்பட்ட கோட்டைபுதூர், ஜி.எம்.நகர், அன்புநகர், குழந்தை கவுண்டர் வீதி, காந்திநகர், ராஜீவ்நகர், பூங்காநகர் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள் மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக உள்ளன. தற்போது உக்கடம் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால் இந்த சாலையில் அதிகளவு வாகனங்கள் சென்று வருகின்றன. அந்த சாலைகள் சிதிலமடைந்து உள்ளதால் அங்கு செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இதனை உடனே சீரமைக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்து மக்கள் கட்சி சார்பில், மாநில செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் லட்சக்கணக்கான வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்தநிலையில் திருப்பூரில் தங்கியிருந்த குற்ற பின்னணியுடைய வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் பலர் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர். கோவையிலும் இதுபோன்று குற்ற பின்னணியுடையவர்கள் தங்கியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே வடமாநிலத்தை சேர்ந்தவர்களின் உண்மை தன்மை மற்றும் குற்றப்பின்னணி குறித்து ஆய்வு செய்து சட்டவிரோதமாக தங்கியிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இருந்தது.

மாற்றுத்திறனாளி வாலிபால் போட்டி சங்க செயலாளர் டி.பிரின்ஸ் தலைமையில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் அளித்த மனுவில், மாற்றுத்திறனாளிகளுக்கான வாலிபால் சங்கத்தின் சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு அமர்ந்தவாறு விளையாடும் மாநில அளவிலான வாலிபால் போட்டிகள் நடத்தப்பட்டது. அதில், சிறப்பாக விளையாடி பல்வேறு பரிசுகளை வென்றோம். இதுபோன்ற தொடர்களில் சிறப்பாக விளையாடும் எங்களுக்கு, பயிற்சி வசதி, உபகரணங்கள் பற்றாக்குறை, போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இன்மை மற்றும் நிதி பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம்.

எனவே, நேரு விளையாட்டு அரங்கில் மாற்றுத்திறனாளி வீரர்களின் பயிற்சிக்காக தனி இடம் ஒதுக்க வேண்டும். மேலும் போட்டி தொடர்களில் பங்கேற்கும் வீரர்களுக்கு நிதி உதவி, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் வீரர்களுக்கு மாவட்ட அளவிலான விருதுகளை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story