குற்ற வழக்கில் சாட்சி சொல்ல ஆஜராகாத: போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு - சங்கரன்கோவில் கோர்ட்டு உத்தரவு
குற்ற வழக்கில் சாட்சி சொல்ல ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து சங்கரன்கோவில் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சங்கரன்கோவில்,
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கலிங்கப்பட்டியை சேர்ந்தவர் செல்லையா மகன் ராமர். மகாதேவர்பட்டியை சேர்ந்த செல்லையா மகன் பொன் மாடசாமி. இவர்கள் 2 பேரும் கடந்த 2013-ம் ஆண்டு கரிவலம்வந்தநல்லூர் அருகில் நிட்சேபநதியில் மணல் திருடி டிராக்டரில் அள்ளிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற போலீசாரை, டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி செய்ததாகவும், அரசு பணியை செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கரிவலம்வந்தநல்லூர் போலீசார், ராமர், பொன்மாடசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சங்கரன்கோவில் சப்-கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆஜராகி சாட்சியம் அளிப்பதற்காக கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் நிலையத்தில் அப்போது இன்ஸ்பெக்டராக இருந்த விஜயகுமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் சம்மனை பெற்றுக் கொண்டும் கோர்ட்டில் ஆஜராகவில்லை.
இந்த நிலையில் நேற்று சங்கரன்கோவில் சப்-கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சொர்ணக்குமார் கோர்ட்டில் ஆஜராகாத இன்ஸ்பெக்டர் விஜயகுமாருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். விஜயகுமார் தற்போது தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story