கடத்தப்பட்ட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மனைவி ஊட்டியில் மீட்பு; 7 பேர் கைது


கடத்தப்பட்ட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மனைவி ஊட்டியில் மீட்பு; 7 பேர் கைது
x
தினத்தந்தி 10 Dec 2018 11:15 PM GMT (Updated: 10 Dec 2018 9:33 PM GMT)

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனின் மனைவி கடத்தப்பட்டு, ஊட்டியில் சிறைவைக்கப்பட்டார். அவரை போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

பூந்தமல்லி,

லத்திகா, ஆனந்த தொல்லை ஆகிய படங்களில் கதாநாயகனாகவும், கன்னா லட்டு தின்ன ஆசையா, ‘ஐ’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் அண்ணாநகர் எல் பிளாக்கில் வசித்துவருகிறார். இவரது மனைவி ஜூலி.

கடந்த 6–ந் தேதி ஜூலி தனது கணவர் பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என அண்ணா நகர் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து அண்ணா நகர் போலீசார் விசாரணை செய்தபோது, தான் ஊட்டியில் இருப்பதாகவும், சொத்தை பத்திரப்பதிவு செய்வதற்காக வந்துள்ளதாகவும் பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்தார். அப்போது அவரது மனைவியும் அவருடன் இருந்தார்.

இந்த நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசன் நேற்று முன்தினம் சென்னை திரும்பி வந்தார். எனவே இந்த விவகாரத்தில் பிரச்சினை எதுவும் இல்லை என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் இரவே பவர் ஸ்டார் சீனிவாசன் கோயம்பேடு போலீஸ் நிலையத்துக்கு வந்து தனது மனைவி கடத்தப்பட்டு, ஊட்டியில் சிறை வைக்கப்பட்டு இருப்பதாக புகார் அளித்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

பவர் ஸ்டார் சீனிவாசன் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:–

கடந்த 3–ந் தேதி சினிமா மக்கள் தொடர்பு அதிகாரி பிரீத்தி எனக்கு போன் செய்து ஒரு படத்திற்கு 10 நாள் கால்ஷீட் வேண்டும் எனவும், ரூ.10 லட்சம் முன்பணம் தர படத்தயாரிப்பாளர் தயாராக இருப்பதாவும் கூறினார். எனவே கோயம்பேடு, 100 அடி சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலுக்கு என்னை அழைத்தார்.

இதனால் கோவையில் இருந்து நான் நேரடியாக எனது காரில் சென்னை வந்து கோயம்பேட்டில் உள்ள அந்த ஓட்டலுக்கு சென்று பிரீத்தியை சந்தித்தேன். சிறிது நேரத்தில் தயாரிப்பாளர் செல்வின் என்று கூறிக்கொண்டு ஒருவர் வந்தார். அவருடன் ஸ்டண்ட் யூனியனை சேர்ந்த ஒருவரும் வந்தார். அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே மேலும் 7 பேர் அறைக்குள் வந்தனர்.

அதில் 3 பேர் வக்கீல்கள் என்று சொன்னார்கள். அவர்கள் வந்தவுடன் என் கையிலிருந்த 2 செல்போன்களையும் பிடுங்கிக்கொண்டார்கள். பின்னர் என் உடைகளை களைந்து என் தொப்பியையும் பறித்துக்கொண்டு என்னை கீழே அமரவைத்தார்கள். நான் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று கேட்டபோது அவர்கள், பெங்களூருவில் உள்ள ஆலம் என்பவரை தெரியுமா? எனக்கேட்டனர். ஆமாம் அவருக்கு நான் ரூ.90 லட்சம் தரவேண்டிய வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது, என்ன வி‌ஷயம் என்று கேட்டேன்.

அந்த பணத்தை உடனே தரவேண்டும் எனக்கேட்டு மிரட்டினார்கள். நான் என்னிடம் பணம் இல்லை, ஊட்டியில் உள்ள வீட்டை எழுதித்தருகிறேன் என்று கூறினேன். அவர்கள் உடனே எழுதிக்கொடு என்றதும், வீடு என் மனைவி பெயரில் உள்ளது அவர் தான் கையெழுத்து போடவேண்டும் என்றேன்.

அப்படியானால் உன் மனைவியை இங்கு அழைத்துவா என்றார்கள். நான் என் மனைவியை ஓட்டலுக்கு அழைத்து வரமாட்டேன், வீட்டிற்கு வந்தால் கையெழுத்து வாங்கித்தருகிறேன் என்றேன். பின்னர் என்னை வலுக்கட்டாயமாக ஊட்டிக்கு அழைத்துச் சென்றனர். ஊட்டியில் ஆலம் அவரது இடத்திற்கு என்னை அழைத்துச்சென்று மிரட்டினார்.

உன் மனைவியை உடனடியாக வந்து ஊட்டியில் உள்ள வீட்டை பத்திரப்பதிவு செய்துதரச்சொல் என்றார். என் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் 6–ந் தேதி விமானம் மூலம் கோவை வரவழைத்து அங்கிருந்து ஊட்டிக்கு காரில் அழைத்துவந்தனர்.

மறுநாள் அந்த சொத்தை பத்திரப்பதிவு செய்ய அழைத்துச் சென்றனர். அப்போது என்னை காணவில்லை, கடத்தப்பட்டேன் என பல்வேறு தகவல்கள் பரவியதையடுத்து பத்திரப்பதிவு செய்ய முடியாமல்போனது. இதையடுத்து மீண்டும் ஓட்டலுக்கு அழைத்துவந்து என்னை மிரட்டினார்கள்.

திங்கட்கிழமை கட்டாயம் பத்திரப்பதிவு எனக்கூறி என்னை ஒரு இடத்தில் அடைத்து வைத்துவிட்டு என் மனைவியை அவர்களுடன் அழைத்துச் சென்றுவிட்டனர். மறுநாள் ஆலம் வந்து திங்கட்கிழமை பத்திரப்பதிவு என்று கூறினார். நான் என் மகள்களை பார்க்கவேண்டும் என்று கூறினேன்.

என்னிடம் சில பேப்பர்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டு என் மனைவியை பணயமாக வைத்துக்கொண்டு என்னை சென்னை செல்ல அனுமதி அளித்தனர். சென்னை வந்த நான் நேராக இங்கு வந்து புகார் அளித்தேன். பணம் கேட்டு மிரட்டி என் மனைவியை கடத்தி அடைத்து வைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்து என் மனைவியை மீட்டுத்தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் புகாரில் தெரிவித்திருந்தார்.

கோயம்பேடு உதவி கமி‌ஷனர் ஜான்சுந்தர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. ஊட்டியில் உள்ள போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ஜூலியை மீட்டு, அவரை கடத்தியது தொடர்பாக ஆலம், செல்வின், பிரீத்தி உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். மீட்கப்பட்ட ஜூலியையும், கைதான 7 பேரையும் சென்னைக்கு அழைத்துவர கோயம்பேடு போலீசார் ஊட்டிக்கு விரைந்துள்ளனர்.

ரூ.90 லட்சம் கொடுக்க வேண்டிய தகராறு காரணமாக பவர் ஸ்டார் சீனிவாசன் மனைவி கடத்தப்பட்டு மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story