தாம்பரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
சென்னையை அடுத்த தாம்பரத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கிராம நிர்வாக அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக தாம்பரத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தாம்பரம் கோட்டத்தை சேர்ந்த ஏராளமான கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் காஞ்சீபுரம் மாவட்ட தலைவர் ஜானகிராமன் கூறுகையில்:–
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கடந்த மாதம் 24–ந்தேதி மாடம்பாக்கம் பகுதியில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் கடந்த மாதம் 28–ந்தேதி முதல் ஆன்லைன் சான்றிதழ் வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து கடந்த 5–ந்தேதி இரவு நேர தர்ணா போராட்டமும், 7–ந்தேதி அன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டமும் நடந்தது. அதனைத்தொடர்ந்து நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக மக்களை தேடி என்கிற போராட்டம் நடைபெறுகின்றது. எங்களுடைய கோரிக்கைகளாக 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதில் குறிப்பாக முதல் கோரிக்கையாக மாவட்டம் மாறுதல், 2–வது கோரிக்கையாக கிராம நிர்வாக அலுவலர்கள் பணியில் குறைந்தபட்சம் 50 சதவீதத்திற்கு மேல் பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் பணிபுரிந்து இருப்பதால் அவர்கள் அடிப்படை தேவைக்காக அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்றும், அதனை தொடர்ந்து ஆன்லைன் சான்றிதழ் கடந்த 2013–ம் ஆண்டு முதல் வழங்கி கொண்டிருக்கின்றோம்.
அதற்காக இணைய தளம் மற்றும் கணினி வசதிகள் செய்து தரவேண்டும் என்றும் உட்பிரிவு பட்டா மாறுதல்களுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் பரிந்துரை பெற்று பட்டா மாறுதல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் உள்பட 20 அம்ச கோரிக்கைகளுக்காக இந்த போராட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது என்றார்.