வாஜ்பாய், அனந்தகுமாா், ஜாபர்ஷெரீப், அம்பரீஷ் மறைவுக்கு கர்நாடக சட்டசபையில் இரங்கல்


வாஜ்பாய், அனந்தகுமாா், ஜாபர்ஷெரீப், அம்பரீஷ் மறைவுக்கு கர்நாடக சட்டசபையில் இரங்கல்
x
தினத்தந்தி 11 Dec 2018 4:45 AM IST (Updated: 11 Dec 2018 3:08 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அனந்த குமார், ஜாபர்ஷெரீப், அம்பரீசுக்கு கர்நாடக சட்டசபையில் இரங்கல் தெரிவிக் கப்பட்டது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வேண்டுகோளை ஏற்று சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர், ஆண்டுதோறும் பெலகாவி சுவர்ண சவுதாவில் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டும் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியில் நடைபெறும் என்று கர்நாடக அரசு ஏற்கனவே அறிவித்தது.

அதன்படி கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் ெபலகாவி சுவர்ண சவுதாவில் நேற்று தொடங்கியது. கூட்டம் பகல் 12.15 மணிக்கு தொடங்கியது.

கூட்டம் தொடங்கியதும், மறைந்த தலைவர்களான முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மத்திய மந்திரி அனந்தகுமார், நடிகர் அம்பரீஷ், முன்னாள் மத்திய மந்திரி ஜாபர்ஷெரீப், முன்னாள் எம்.எல்.ஏ. பக்தவச்சலம் உள்பட 14 பேருக்கு இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் ரமேஷ்குமார் தாக்கல் செய்தார்.

இந்த தீர்மானம் மீது முதல்-மந்திரி குமாரசாமி பேசும்போது கூறியதாவது:-

உலகையே இந்தியா பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய். சிறந்த பேச்சாளர், சிந்தனையாளர். ஒரு நல்ல அரசியல்வாதியாக இருந்தார். அரசியலில் எதிரிகளுக்கும் நண்பராக இருந்த வாஜ்பாய், களங்கம் இல்லாத புகழுக்கு சொந்தக்காரர் ஆவார்.

1975-ம் ஆண்டு நெருக்கடி நிலையை எதிர்த்து போராடி சிறைக்கு சென்றார். 1977-ம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அமைந்த காங்கிரஸ் அல்லாத அரசில் வெளியுறவுத்துறை மந்திரியாக சிறப்பான முறையில் பணியாற்றியவர் வாஜ்பாய்.

அவர் மூன்று முறை நாட்டின் பிரதமராக இருந்தபோது செய்த பணிகள் எப்போதும் நினைவில் நிற்கும். நாட்டில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தங்க நாற்கர சாலை அமைத்த பெருமைக்குரியவர் வாஜ்பாய்.

பிரதமர் கிராமப்புற சதக் திட்டத்தின் மூலம் கிராமங் களுக்கு இணைப்பு சாலை அமைத்து கொடுத்தவர். சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்தின் மூலம் படிப்பறிவின்மையை போக்கியவர். 1998-ம் ஆண்டு அணுசக்தி சோதனையை நடத்தி, நமது நாட்டின் பலத்தை உலகுக்கு பறைசாற்றியவர்.

1999-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்து, நட்புறவை வளர்க்க முயற்சி ெசய்தார்். நட்புக்கு பாகிஸ்தான் நம்பிக்கை துரோகம் செய்தபோது, கார்கில் போரில் தக்க பதிலடி கொடுத்தார். வாஜ்பாய், அரசியலில் பீஷ்மராக திகழ்ந்தார்.

வாஜ்பாய் மறைவு மூலம் நாடு ஒரு எளிமையான தலைமையை இழந்துவிட்டது. மத்திய மந்திரியாக இருந்த அனந்தகுமார், நமது மாநிலத்தின் நீர், நிலம், எல்லை பகுதிகளை காப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்பட்டார். விமானம், நகர வளர்ச்சி, சுற்றுலா உள்பட பல்வேறு துறைகளின் மந்திரியாக இருந்தார்.

மத்தியில் கர்நாடகத்தின் குரலாக திகழ்ந்தார். ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்துகொண்டு அனந்தகுமார், கன்னடத்தில் பேசி நமது மொழிக்கு பெருமை தேடித்தந்தார். அனந்தகுமாரின் மறைவு கர்நாடகத்திற்கும், நமது நாட்டுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அம்பரீஷ், ‘ரெபல் ஸ்டார்’ கலியுக கர்ணன் என்று அழைக்கப்பட்டவர். அவர் அநீதிக்கு எதிராக குரல் எழுப்பினார். கன்னட திரைத்துறையில் பீஷ்மராக இருந்த அவர் கர்நாடகத்திற்காக ஆற்றிய சேவை என்றென்றும் மறக்க முடியாது.2006-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை மத்திய செய்தி மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரியாக பணியாற்றினார். காவிரி பிரச்சினை வந்தபோது, மத்திய மந்திரி பதவி மற்றும் எம்.பி. பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

கர்நாடகத்தில் வீட்டு வசதித்துறை மந்திரியாக பணியாற்றிய அம்பரீஷ், வீடு இல்லாதவர்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்தி கொடுக்க நேர்மையாக உழைத்தார். என்னிடம் நெருங்கி பழகிய அவர், திடீரென மரணம் அடைந்தது எனக்கு மட்டுமின்றி கர்நாடகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்திவிட்டது.

மறைந்த ஜாபர்ஷெரீப், மத்தியரெயில்வேத்துறை மந்திரியாக இருந்தபோது, கர்நாடகத்தில் பல்வேறு ரெயில்வே திட்டங்களை அமல்படுத்தினார். அவர் திறமையான அரசியல்வாதி. பெங்களூரு வடக்கு நாடாளுமன்ற தொகுதியில் இருந்து தொடர்ச்சியாக 7 முறை எம்.பி.யாக வெற்றி பெற்றவர். சதாப்தி மற்றும் ராஜதானி ரெயில் சேவையை கர்நாடகத்தில் இருந்து அவர் தொடங்கினார்.

நாட்டில் ரெயில்வே குறுகிய பாதையை, அகலப் பாதையாக மாற்றியவர். எலகங்காவில் ரெயில்வே சக்கர உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்பட்டதில் ஜாபர்ஷெரீப்பின் பங்கு மிக முக்கியமானது. இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி, நரசிம்மராவ் ஆகியோரின் மந்திரிசபையில் ரெயில்வே, நீர்ப்பாசனம் மற்றும் நிலக்கரித்துறை மந்திரியாக பணியாற்றியபோது அவர் ஆற்றிய சேவைகளை மறக்க முடியாது. வாஜ்பாய், அனந்தகுமார், ஜாபர்ஷெரீப் ஆகியோர் நாட்டிற்காக சிறந்த முறையில் சேவையாற்றினர்.

மறைந்த கோலார் தங்கவயல் முன்னாள் எம்.எல்.ஏ. பக்தவச்சலம், 3 முறை கர்நாடக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். கோலார் தங்கவயல் நகராட்சி தலைவராகவும், கோலார் மாவட்ட பொருளாதார வளர்ச்சி வாரிய உறுப்பினராகவும் பணியாற்றினார். அவர் கோலார் மாவட்ட வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தார்.

அதே போல் முன்னாள் மந்திரிகள் திப்பேசாமி, ஈட்டி சம்புநாத், ஓம்பிரகாஷ் கனகலி, விமலாபாய் ேதஷ்முக் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மல்லப்ப வீரப்பஷெட்டி, விஸ்வநாத், கரபசப்பா, மாமனி, ரவீந்திரா, பாபுரெட்டி, வெங்கடப்பா துங்கல், எச்.எஸ்.பிரகாஷ் ஆகியோர் உள்பட 14 பேரின் மறைவுக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.

இந்த தீர்மானம் மீது எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா, பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் உறுப்பினர்களும் பேசினர்.

அதன்பின்னர் இந்த இரங்கல் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

இதைதொடர்ந்து சபாநாயகர் ரமேஷ்குமார் பேசியதாவது:-

“பொதுவாக கர்நாடக சட்டசபையில் தற்போது உறுப்பினராக இருப்பவர்கள் மரணம் அடைந்தால் மட்டுமே, சபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு, அன்று முழுவதும் சபை ஒத்திவைக்கப்படுவது மரபு.

ஆனால் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதை அடுத்து, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் பொருட்டு சபையை நாள் முழுவதும் ஒத்திவைக்கிறேன். சபை மீண்டும் நாளை (அதாவது இன்று) காலை 10 மணிக்கு கூடும்”.

இவ்வாறு அவர் பேசினார். அதைதொடர்ந்து சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதையொட்டி சுவர்ண சவுதாவை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே பெலகாவி கலெக்டர் அலுவலகம் முன்பு நிலுவைத்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க கோரி கரும்பு விவசாயிகள் தங்களின் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அந்த போராட்டம் நேற்றும் நீடித்தது.

முதல்-மந்திரி, மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு தங்கும் வசதி, உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடர் 10 வேலை நாட்கள் நடக்கிறது. அதாவது வருகிற 12-ந் தேதி இந்த கூட்டத்தொடர் நிறைவடைகிறது.

பெலகாவியில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறுவதையொட்டி, ஒட்டுமொத்த கர்நாடக அரசு எந்திரமும் பெலகாவிக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து துறைகளின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் பெலகாவியில் தங்கியுள்ளனர்.

இதன் காரணமாக கர்நாடக அரசின் உச்சபட்ச அதிகார மையமாக எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காட்சி அளிக்கும் விதான சவுதா, ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

Next Story