கிராம உதவியாளரை தாக்கியதை கண்டித்து வருவாய்த்துறையினர் வேலை நிறுத்த போராட்டம்


கிராம உதவியாளரை தாக்கியதை கண்டித்து வருவாய்த்துறையினர் வேலை நிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 10 Dec 2018 11:15 PM GMT (Updated: 10 Dec 2018 9:53 PM GMT)

திருப்போரூர் அருகே கிராம உதவியாளரை தாக்கியதை கண்டித்து வருவாய்த்துறையினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்போரூர்,

திருப்போரூரை அடுத்த குண்ணப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பஞ்சந்திருத்தி கிராமம் இருளர் பகுதியில் போலி வாக்காளர் இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் உத்தரவின்பேரில், கடந்த 8–ந்தேதி வருவாய்த்துறையினர், வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் அந்த பகுதிக்கு வாக்காளர் பட்டியலை ஆய்வு மேற்கொள்ள சென்றனர்.

அப்போது அந்த பகுதியினர் இதுபோன்று அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வருகிறீர்கள், அறிவிப்பு இல்லாமலும் வருகிறீர்கள், தினசரி நாங்கள் கூலி வேலைக்கு செல்கிறோம். இதனால் வீட்டில் இல்லை என நினைத்து பட்டியலில் இருந்து நீக்கிவிட வாய்ப்பு உள்ளது என கூறி அவர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளுடன் இருந்த கிராம உதவியாளர் சங்கரன் என்பவரை அந்த பகுதியினர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பத்தை கண்டித்து நேற்று திருப்போரூர் தாசில்தார் அலுவலகம் முன், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட 100–க்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் பணி நடக்கவிடாமல் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று மானாமதி போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story