காஞ்சீபுரம் அருகே கத்திமுனையில் வழிப்பறி; 2 பேர் கைது


காஞ்சீபுரம் அருகே கத்திமுனையில் வழிப்பறி; 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 Dec 2018 10:45 PM GMT (Updated: 10 Dec 2018 9:53 PM GMT)

காஞ்சீபுரம் அருகே கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்டது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் காஞ்சீபுரத்தை அடுத்த சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை காஞ்சீபுரம் அருகே வெள்ளைகேட் என்ற இடத்தில் சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் போலீசாரை பார்த்ததும், மிரள, மிரள விழித்தனர். உடனே போலீசார் அவர்கள் வந்த மோட்டார்சைக்கிள் ஆர்.சி புக்கை கேட்டனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தனர்.

உடனே போலீசார் மோட்டார்சைக்கிள் பதிவு எண்ணை பார்த்தனர். அந்த மோட்டார்சைக்கிளில் மற்றொரு எண் இருந்ததை கண்ட போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சென்னை– –பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செல்லக்கூடியவர்களிடம் கத்தியை காட்டி 10 செல்போன்களை பறித்ததை ஒப்பு கொண்டனர்.

அவர்கள் மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை மாற்றி இந்த வழிப்பறியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட ஆனந்தராஜ் என்கிற கோயம்பேடு கிட்டு (வயது 20), அவரது நண்பரான கோயம்பேட்டை சேர்ந்த 16 வயது சிறுவனையும் காஞ்சீபுரம் தாலுகா போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடமிருந்து விலை உயர்ந்த 10 செல்போன்கள், கத்தி, மோட்டார்சைக்கிளை போலீசார் கைப்பற்றினர். இவர்கள் இருவர் மீதும் சென்னை கோயம்பேடு, மதுரவாயல் போன்ற போலீஸ் நிலையங்களில் வழிப்பறி வழக்குகள், அடி–தடி வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

 


Next Story