திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கி இருந்த: வங்காளதேசத்தை சேர்ந்த மேலும் 12 பேர் கைது - போலி ஆதார் அட்டைகள் பறிமுதல்


திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கி இருந்த: வங்காளதேசத்தை சேர்ந்த மேலும் 12 பேர் கைது - போலி ஆதார் அட்டைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 11 Dec 2018 5:00 AM IST (Updated: 11 Dec 2018 3:34 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தை சேர்ந்த மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து போலி ஆதார் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

அனுப்பர்பாளையம், 

திருப்பூரில் ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மட்டுமல்லாது பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர் களும் அதிக எண்ணிக்கையில் வேலை பார்த்து வருகிறார்கள். மேலும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் தங்கி இருந்து வேலை செய்கிறார்கள்.

ஏற்கனவே உரிய ஆவணங்கள் இன்றி, தங்கி இருந்ததாக நைஜீரியாவை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் போலி ஆவணங்களுடன், சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்காள தேசத்தினரையும் போலீசார் கைது செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் திருப்பூர் சிறுபூலுவப்பட்டி பகுதியில் 15 வேலம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் பிச்சைமணி ஆகியோர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அவர்கள் போலீசாரிடம் இந்தி மற்றும் வங்காள மொழியில் பேசினார்கள். மேலும் அந்த வாலிபர்கள் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பேசியதை தொடர்ந்து அவர்கள் 12 பேரையும், போலீசார் 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர்கள் வங்காள தேசத்தை சேர்ந்த முகமது சலீம் காஜி (வயது 38), பஜ்லூல் ஹக் (40), முகமது ராபின் உசேன் (23), இப்ராகிம் காஜி (23), முகமது லிட்டோன் ஷேக் (26), முகமது ரோணி ஷேக் (21), முகமது ஹிரிடாய் ஷேக் (19), முகமது ரஷிதுல் ஹக் (27), பஷார் (26), முகமது மாமூன் பிஸ்வாஸ் (25), தில்வார் உசேன் (24), முகமது அன்வர் உசேன் (29) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

இவர்கள் அனைவரும் சிறுபூலுவப்பட்டி பகுதியில் உள்ள விடுதியில் தங்கி தண்ணீர்பந்தல் காலனியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். அவர்களிடம் வங்காளதேச நாட்டை சேர்ந்தவர்கள் என்பதற்கு எந்த அடையாள அட்டையும் இல்லை. இதேபோல் அவர்கள் இந்தியா வந்ததற்கான பாஸ்போர்ட், விசா என எதுவும் அவர்களிடம் இல்லை. இதையடுத்து உரிய ஆவணங்களின்றி சட்ட விரோதமாக தங்கி இருந்ததாக, 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 12 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து போலி ஆதார் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர் அவர்கள் அனைவரும் திருப்பூர் 3-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் முகமது சலீம் காஜி கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வங்காள தேசத்தில் இருந்து கள்ளத்தோணி மூலமாக இந்தியாவிற்கு வந்துள்ளார். பின்னர் அவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து அங்கு வேலை இல்லாததால் அங்கிருந்து திருப்பூர் வந்து அவினாசி ரோடு தண்ணீர்பந்தல் காலனியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்துள்ளார். இதன் பின்பு அவருடைய நண்பர்களை அவருடைய பாணியிலேயே கள்ளத்தோணி மூலமாக இந்தியாவிற்கு வரவழைத்து, திருப்பூருக்கு அழைத்து வந்துள்ளார்.

திருப்பூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உரிய ஆவணங்களின்றி தங்கி இருந்ததாக வங்கதேசத்தை சிலர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் அதே நாட்டை சேர்ந்த 2 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்றும் 12 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திருப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story