புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கக்கோரி தாசில்தாரிடம் மனு அளிக்கும் போராட்டம்


புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கக்கோரி தாசில்தாரிடம் மனு அளிக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 10 Dec 2018 10:45 PM GMT (Updated: 10 Dec 2018 10:23 PM GMT)

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கக்கோரி கும்பகோணத்தில் தாசில்தாரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.

கும்பகோணம்,

‘கஜா’ புயலால் சேதமடைந்த கூரை வீடுகள், தொகுப்பு வீடுகள், ஓட்டு வீடுகளுக்கு பதிலாக புதிய கான்கிரீட் வீடுகளை உடனடியாக அரசே கட்டிக்கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நெல், கரும்பு, வாழை பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பயிர்க்காப்பீடு திட்ட காலக்கெடுவை வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்க வேண்டும்.

கூட்டுறவு, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், நிதி நிறுவனங்களில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை ரத்து செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் அனைத்துத்துறை அதிகாரிகளும் நேரில் சென்று பாதிப்புகளை முழுமையாக கணக்கெடுக்க வேண்டும்.

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கும்பகோணம் தாசில்தாரிடம் மனு அளிக்கும் போராட்டம் நேற்று நடந்தது. முன்னதாக தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார், விவசாய தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் தனித்தனியாக கோரிக்கை மனுவை தாசில்தார் ஜானகிராமனிடம் அளித்தனர். 

Next Story