வேட்டைக்காரர்களுக்கு பயந்து மணல் திட்டுக்கு இடம் பெயர்ந்த கடல் புறாக்கள்
வேட்டைக்காரர்களுக்கு பயந்து தனுஷ்கோடியில் இருந்து மணல் திட்டுக்கு கடல் புறாக்கள் இடம் பெயர்ந்து வருகின்றன.
ராமேசுவரம்,
தனுஷ்கோடியில் உள்ள பாலம், கம்பிப்பாடு ஆகிய பகுதிகளில் 300–க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் மீன் பிடித் தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
ராமேசுவரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி சென்று புயலால் அழிந்து போன கட்டிடங் களையும், கடல்கள் சங்கமிக்கும் கடல் பகுதியான அரிச்சல்முனை கடல் பகுதியையும் பார்த்து ரசித்து விட்டு திரும்புவர். தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் ஆயிரக்கணக்கான கடல் புறாக்கள் வாழ்ந்து வருகின்றன.இந்த கடல் புறாக்கள் மீன்களை பிடித்து வேட்டையாடவும்,ஓய்வெடுக்கவும் எம்.ஆர்.சத்திரம் முதல் அரிச்சல்முனை கடற்கரை பகுதி வரை பறந்து திரிவதை காணலாம்.
இந்நிலையில் கம்பிப்பாடு அருகே உள்ள கடற்கரை பகுதிகளில் கடல் புறாக்களை வேட்டையாட மர்ம நபர்கள் சிலர் கடற்கரை மணல் பரப்பில் வலைகளை புதைத்து வைத்திருந்தனர்.கண்ணுக்கு தெரியாத அந்த வலையில் 3 கடல் புறாக்கள் சிக்கின.புறாக்களின் கால்கள் வலையில் சிக்கியதால் பறக்க முடியாமல் தவித்து கொண்டிருந்தன.அப்போது அங்கு வந்த சுற்றுலா பயணிகள் வலையில் சிக்கி தவித்து கொண்டிருந்த கடல் புறாக்களை காப்பாற்றி மீண்டும் பறக்க விட்டனர். அப்போது சுற்றுலாபயணிகளை கண்டு மர்மநபர்கள் தப்பிச் சென்று விட்டனர்.
இந்நிலையில் வேட்டைகாரர்களுக்கு பயந்து கடல்புறாக்கள் தனுஷ்கோடி கடற்கரை பகுதியில்இருந்து மணல் திட்டுகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றன. இதையடுத்து பறவைகளை வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுபற்றி வனச்சரகர் சதிஷ் கூறியதாவது:–
தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் ஆயிரக்கணக்கான கடல் புறாக்கள் வாழ்ந்து வருகின்றன.கடல் புறா மற்றும் எந்தவொரு பறவையை வேட்டையாடினாலும் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் அபராதத்துடன் 3 வருட சிறை தண்டனை விதிக்கப்படும். பறவைகளை யாரும் வேட்டையாடினால் இது குறித்து 94879–16686 இந்த செல்போன் எண்ணுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.