சிவகாசி நேரு காலனியில் பசுமை உரக்குடில்: சமாதானக் கூட்டத்தில் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு


சிவகாசி நேரு காலனியில் பசுமை உரக்குடில்: சமாதானக் கூட்டத்தில் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 11 Dec 2018 4:23 AM IST (Updated: 11 Dec 2018 4:23 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி நேரு காலனியில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட உள்ள பசுமை உரக்குடிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சமாதான கூட்டத்தில் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சிவகாசி,

சிவகாசி நகராட்சியின் எல்லைப் பகுதியான நேரு காலனியில் நகராட்சி சார்பில் பசுமை உரக்குடில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகளை நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பணியை தொடர விடாமல் தடுத்தனர். இதை தொடர்ந்து நகராட்சி உதவி என்ஜினீயர் முத்து மற்றும் அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறினர். இந்த நிலையில் பசுமை உரக்குடில் அமைக்கக் கூடாது என்று மாவட்ட நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் மனு செய்தனர். இந்த நிலையில் நேற்று சிவகாசி தாலுகா அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் மற்றும் அதிகாரிகளிடையே சமாதான கூட்டம் தாசில்தார் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி என்ஜினீயர் சீனிவாசன், கிழக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சீனிவாசகன், உதவி என்ஜினீயர் முத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் நேரு காலனி மக்கள் கலந்து கொண்டனர்.

சமாதான கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் நேரு காலனியில் பசுமை உரக்குடில் அமைக்கப்பட்டால் அந்த பகுதிக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து பேசினர். இதை அமைதியாக கேட்டு கொண்ட அதிகாரிகள், தமிழகம் முழுவதும் பல இடங்களில் பசுமை உரக்குடில் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருவதை வீடியோ படங்கள் மூலம் விளக்கினர்.

தங்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க முன்வராத நகராட்சி நிர்வாகம், அவரசம் அவசரமாக பசுமை உரக்குடில் அமைப்பதில் ஆர்வம் காட்டுவது ஏன் என்று அப்பகுதி மக்கள் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் குற்றச்சாட்டுக்களை கவனமாக கேட்டுக்கொண்ட தாசில்தார் பரமானந்த ராஜா உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை செய்துவிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அப்போது சமாதான கூட்டத்துக்கு வந்த சிலர் பசுமை உரக்குடில் அமைப்பதை கைவிடாவிட்டால் ரேசன்கார்டுகளை அரசிடம் திரும்ப ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக கூறினர்.


Next Story