சொத்து தகராறில் ஆத்திரம்: அம்மிக்கல்லை தலையில் போட்டு தம்பியை கொன்றவர் கைது
தூங்கி கொண்டிருந்த தம்பியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
பேரையூர்,
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி ஜோசியர் தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவர் கூட்டுறவு வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருக்கு நாகராஜன் (வயது 44), செந்தில்நாதன்(43), ஞானேசுவரன் ஆகிய 3 மகன்கள்.
சமீபத்தில் வெள்ளைச்சாமி இறந்துபோன நிலையில், அவரது பெயரில் உள்ள சொத்துகளை பிரிப்பதில் செந்தில்நாதனுக்கும், நாகராஜனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு செந்தில்நாதன் சில சொத்துகளை தனது பெயருக்கு மாற்றுவதற்காக சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றாராம். இதுகுறித்து நாகராஜனுக்கு தகவல் தெரியவரவே 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது உறவினர்கள் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு செந்தில்நாதன் தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அவரது குடும்பத்தினர் பக்கத்து அறையில் இருந்தனர்.
நள்ளிரவு நேரத்தில் அவரது வீட்டிற்குள் புகுந்த நாகராஜன், அம்மிக்கல்லை எடுத்து தூங்கி கொண்டிருந்த செந்தில்நாதனின் தலையில் போட்டுள்ளார். இதில் தலைநசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இந்த சத்தம் கேட்டு அவருடைய குடும்பத்தினர் ஓடிவந்தனர். அங்கு செந்தில்நாதன் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அலறினர். இதற்கிடையே நாகராஜன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த டி.கல்லுப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகாண்டீபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். செந்தில்நாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் பதுங்கியிருந்த நாகராஜனை போலீசார் கைது செய்தனர்.
சொத்து தகராறில் தம்பியை கொன்ற அண்ணன் கைது செய்யப்பட்ட சம்பவம் டி.கல்லுப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.