நாராயணசாமி மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர ஆலோசனை; பா.ஜனதா அறிவிப்பு
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை விமர்சித்த முதல்–அமைச்சர் நாராயணசாமி, லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. ஆகியோர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்கப்படும் என்று பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.
புதுச்சேரி,
பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
புதுவையை ஆளும் முதல்–அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வருகிறார். கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் திட்ட அறிக்கையை கொண்டுவந்ததே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் சிவக்குமார்தான். அவரை கண்டிக்காமல் முதல்–அமைச்சர் நாராயணசாமி சட்டசபையில் மத்திய அரசை கண்டித்து தீர்மானம் கொண்டுவருவோம் என்கிறார். உண்மை நிலையை மறைக்கிறார்.
சமீபத்தில் நியமன எம்.எல்.ஏ.க்கள் விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டு சரியான தீர்ப்பினை வழங்கி உள்ளது. அதுதொடர்பாக முதல்–அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் தேவை என்று தேவையில்லாததை கூறியுள்ளார். முதல்–அமைச்சரும் சட்டத்தில் ஓட்டை உள்ளது என்கிறார்.
இந்த விஷயத்தில் ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் ஒரே மாதிரியான தீர்ப்பினை வழங்கி உள்ளன. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினை முதல்–அமைச்சரும், லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ.வும் விமர்சித்து வருகின்றனர். அவர்கள் அரசியல் சாசன சட்டத்தை கொச்சைப்படுத்துகிறார்கள். அரசியல் சாசன சட்டத்தை கொச்சைப்படுத்தும் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ.வின் பதவியை பறிக்கவேண்டும்.
லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ.வின் அறிக்கை சட்டத்துறைக்கு விடப்பட்ட சவால். அவர் ஏற்றுக்கொண்டுள்ள சத்திய பிரமாணத்தை மீறியுள்ளார். முதல்–அமைச்சர் மற்றும் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்வது சம்பந்தமாக சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசிப்போம்.
நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் உள்துறை அமைச்சகம் எந்த இடத்திலும் சட்டத்தை மீறவில்லை. வியாபார நோக்கோடு கடந்த காலங்களில் நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்து உள்ளனர். அரசியல் லாபத்திற்காகவோ, ஆட்சி மாற்றத்துக்காகவோ நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்படவில்லை. கவர்னரோ, முதல்–அமைச்சரோ பரிந்துரை செய்யாமல் நேரடியாக மத்திய அரசே நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்கலாம் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி சார்பில் வாதாடிய மூத்த வக்கீல் கபில் சிபலும், நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டதில் ஆட்சேபனை இல்லை என்றும், ஆனால் ஓட்டுரிமை கொடுக்க வேண்டாம் என்றுதான் கூறியிருந்தார். முதல்–அமைச்சர் நாராயணசாமிக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களே உள்ளனர். மாநில அந்தஸ்து தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துகேட்க வேண்டும். எங்களது லட்சியம் புதுவைக்கான தனிக்கணக்கை ரத்துசெய்து மத்திய அரசிடம் இருந்து 70 சதவீத மானியத்தை பெறவேண்டும் என்பதுதான்.
பேரிடர் மேலாண்மைக்கு என மத்திய அரசு ஏற்கனவே ரூ.25 கோடி வழங்கியுள்ளது. அந்தநிதியிலிருந்து புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவலாம். ஆனால் அந்த நிதியை எடுத்து புதுவை அரசு கடலோர பகுதியில் மின் விளக்குகள் அமைக்க செலவிட்டு உள்ளது.
இவ்வாறு சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.