திண்டுக்கல் அருகே: ஒரு பவுன் நகைக்காக மூதாட்டி அடித்துக்கொலை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


திண்டுக்கல் அருகே: ஒரு பவுன் நகைக்காக மூதாட்டி அடித்துக்கொலை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 11 Dec 2018 4:00 AM IST (Updated: 11 Dec 2018 5:45 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே ஒரு பவுன் நகைக்காக மூதாட்டியை அடித்துக்கொன்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திண்டுக்கல்,

திண்டுக்கல்லை அடுத்த எரியோடு வரதராஜபுரத்தை சேர்ந்த வெங்கிடுசாமி மனைவி ராமுத்தாய் (வயது 65). வெங்கிடுசாமி ஏற்கனவே இறந்துவிட்டார். ராமுத்தாயின் மருமகள் கலைச்செல்வி. இவருடைய கணவரும் இறந்துவிட்டார். இதனால் ராமுத்தாய், கலைச்செல்வி, இவருடைய மகன் ஆகியோர் ஒரு வீட்டில் வசித்து வந்தனர்.

கலைச்செல்வியின் மகன் அரசு பள்ளியில் படித்து வருகிறான். கலைச்செல்வி கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று கலைச்செல்வி வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் ராமுத்தாய் இல்லை. இதனால் அவரை அக்கம்பக்கத்தில் கலைச்செல்வி தேடியுள்ளார்.

இந்த நிலையில் வீட்டுக்கு பின்புறம் தலையில் படுகாயங்களுடன் ராமுத்தாய் உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு, திண்டுக் கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமுத்தாய் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த எரியோடு போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மர்ம நபர்கள் ராமுத்தாயை தாக்கி, அவர் அணிந்திருந்த 1 பவுன் கம்மலை கொள்ளையடித்துச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து, மூதாட்டி கொலை செய்யப்பட்டது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர். ஒரு பவுன் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story