ராதாபுரத்தில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம்: அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்த வேண்டாம் கலெக்டர் ஷில்பா வேண்டுகோள்


ராதாபுரத்தில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம்: அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்த வேண்டாம் கலெக்டர் ஷில்பா வேண்டுகோள்
x
தினத்தந்தி 12 Dec 2018 4:00 AM IST (Updated: 11 Dec 2018 6:32 PM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்த வேண்டாம் என ராதாபுரத்தில் நடந்த மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் ஷில்பா வேண்டுகோள் விடுத்தார்.

ராதாபுரம், 

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்த வேண்டாம் என ராதாபுரத்தில் நடந்த மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் ஷில்பா வேண்டுகோள் விடுத்தார்.

குறைதீர்க்கும் கூட்டம் 

ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், ராதாபுரம், கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, கூத்தங்குளி, கூட்டப்பனை, கூடுதாழை, உவரி உள்ளிட்ட மீனவ கிராம மீனவர்களின் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். இன்பதுரை எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் தேசிய கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டம், மீன் பிடி தடைகால நிவாரண திட்டம், மீன் பிடி குறைவு கால நிவாரண திட்டம், கம்பியில்லா தொடர்பு சாதனம், உயிர் காக்கும் சாதனம் வழங்குதல், மீனவர் அடையாள அட்டை மற்றும் மானிய விலையில் மண்எண்ணெய் வழங்கும் திட்டம், இழு வலை படகுகளை சூரை மீன் பிடிப்பு படகாக மாற்ற 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம், நலத்திட்ட உதவிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர் கலெக்டர் ஷில்பா பேசியதாவது:–

தண்டனைக்குரிய குற்றம் 

மீனவர்களின் குறைகளை கேட்டறிந்து அவைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும். கடல் ஆமைகள் இனவிருத்தி மேற்கொள்ள நிலத்தினை நோக்கி ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை வருகின்றன. அவற்றை பிடிக்காமல் கடலில் விட்டுவிட வேண்டும். மேலும் இந்திய வனவிலங்கு சட்டத்தின்படி, கடல் ஆமைகளை பிடிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். கடலில் சுருக்கு வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

எனவே நெல்லை மாவட்ட கடலோர மீனவ கிராமங்களுக்கான கூடுதாழை முதல் கூட்டப்புளி வரையில் உள்ள 7 மீனவ கிராமங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீனவர்கள் மீன் பிடிக்காமல், தமிழக அரசு வகுக்கும் திட்டங்களை முறையாக பெற்று பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், கரையும் கடல் கரைகளை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டரிடம், மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.

நிகழ்ச்சியில் சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மீன்வளத்துறை இணை இயக்குனர் ஆதிரா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story