தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் கரூரில் முகாம்: செந்தில்பாலாஜியை சமாதானப்படுத்தும் முயற்சி தோல்வி


தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் கரூரில் முகாம்: செந்தில்பாலாஜியை சமாதானப்படுத்தும் முயற்சி தோல்வி
x
தினத்தந்தி 12 Dec 2018 4:45 AM IST (Updated: 12 Dec 2018 12:16 AM IST)
t-max-icont-min-icon

செந்தில்பாலாஜி தி.மு.க.வில் இணைவது பற்றி தகவல் பரவி வருவதால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கரூரில் முகாமிட்டு ஆலோசனை நடத்தினர். செந்தில் பாலாஜியை சமாதானப் படுத்தும் அவர்கள் முயற்சி தோல்வியடைந்தது.

கரூர்,

கரூரை சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி. தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான இவர், அ.ம.மு.க. கரூர் மாவட்ட செயலாளராகவும், மாநில அமைப்பு செயலாளராகவும் பொறுப்பு வகிக்கிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கட்சியின் தலைமை மீது அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதன் எதிரொலியாக அ.ம.மு.க.வில் இருந்து செந்தில்பாலாஜி விலகி தி.மு.க.வில் இணையப்போவதாகவும் தகவல் பரவியது.

இதைத்தொடர்ந்து கரூர் ராமகிருஷ்ணபுரத்திலுள்ள தனது அலுவலகத்தில் செந்தில்பாலாஜி தனக்கு நெருக்கமான ஆதரவாளர்களுடன் கடந்த 9-ந்தேதி ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் தனது அலுவலகத்தில் ஆதரவாளர்களை சந்தித்து கருத்து கேட்டார். பின்னர் செந்தில்பாலாஜி அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். அதன் பிறகு யாரையும் அவர் சந்திக்கவில்லை. அவர் இருக்கும் இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அவரது செல்போனை தொடர்பு கொள்ள முயன்ற போது, அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் செந்தில்பாலாஜி மவுனம் காப்பது ஏன்? என அ.ம.மு.க.வினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே மாநில பொருளாளரும், தஞ்சாவூர் தகுதி நீக்க எம்.எல்.ஏ.வுமான ரெங்கசாமி கரூருக்கு வந்தார். பின்னர் செந்தில்பாலாஜியின் அலுவலகத்தில் காத்திருந்தும் அவரை சந்திக்கமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார். பின்னர் கரூர் ஜவகர்பஜார் அருகே உள்ள ஒரு பிரபல ஓட்டலில் அறை எடுத்து தங்கினார்.

இந்த நிலையில் தினகரன் அணியின் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களான அரூர் முருகன், சோளிங்கர் பார்த்திபன் மற்றும் தென்மண்டல அமைப்பு செயலாளர் மாணிக்கராஜ், குடியாத்தம் பத்மநாபன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நேற்று ரெங்கசாமி தங்கியிருந்த ஓட்டலில் முகாமிட்டு ஆலோசனை நடத்தினர். செந்தில்பாலாஜியை சந்தித்து பேசி சமாதானப்படுத்த முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அவர்களும் செந்தில்பாலாஜியை பார்க்க முடியாததால் ஏமாற்றம் அடைந்தனர்.

அவர்கள் முயற்சி தோல்வியடைந்ததால் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக தங்களது கார்களில் ஏறி புறப்பட்டு சென்றனர். அப்போது அவர்களிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, அவர்கள் பதில் எதுவும் தெரிவிக்காமல் சென்றனர்.

Next Story