தாராபுரத்தில் மளிகை கடையின் மேற்கூரையை உடைத்து பணம் திருட்டு; மர்ம ஆசாமிகள் கைவரிசை


தாராபுரத்தில் மளிகை கடையின் மேற்கூரையை உடைத்து பணம் திருட்டு; மர்ம ஆசாமிகள் கைவரிசை
x
தினத்தந்தி 11 Dec 2018 11:00 PM GMT (Updated: 11 Dec 2018 7:07 PM GMT)

தாராபுரத்தில் மளிகை கடையின் மேற்கூரையை உடைத்து கடையில் இருந்த பணம் மற்றும் மளிகை பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர்.

தாராபுரம்,

தாராபுரம் ஆர்.கே.ஆர் நகரை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 42). இவர் புறவழிச்சாலையில் அமராவதிசிலை ரவுண்டானா அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும், வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் நேற்று காலை கடைக்கு சென்று கடையை திறந்து பார்த்தபோது, தகரத்தால் ஆன கடையின் மேற்கூரையை மர்ம ஆசாமிகள் உடைத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பிறகு கடைக்குள் சென்று பார்த்தபோது, கடையில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. மேலும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மளிகைப் பொருட்களையும் மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுள்ளனர்.

இது குறித்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவம் நடந்த கடைக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பொன்னுச்சாமி கடையை பூட்டி விட்டு சென்ற பிறகு நள்ளிரவு நேரம், இவருடைய கடைக்கு சென்ற மர்ம ஆசாமிகள், கடையின் மேற்கூரையை உடைத்து அங்கிருந்த பணம் மற்றும் மளிகை பொருட்களை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியில், கடையின் மேற்கூரையை உடைத்து, திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தாராபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக கடைகளை குறிவைத்து மர்ம ஆசாமிகள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் புறவழிச்சாலையில் ஐ.டி.ஐ கார்னர் பகுதியில் உள்ள பேன்சி கடையின் மேற்கூரையை உடைத்து, மர்ம நபர்கள் உள்ளே சென்று, கடையில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள பேன்சி பொருட்களை திருடிச் சென்றனர். அதேபோல் சத்திரம் பகுதியில் ஒரே இரவில் 2 உரக்கடைகளின் பூட்டை உடைத்து கடையில் வைத்திருந்த ரூ.35 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பூச்சி மருந்துகளையும் திருடிச் சென்றனர்.

தற்போது மளிகைக் கடையிலும் மர்ம நபர்கள் தங்களுடைய கைவரிசையை காட்டியுள்ளனர். கடைகளில் அடுத்தடுத்து திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், இப்பகுதியில் உள்ள வியாபாரிகள் பீதி அடைந்துள்ளனர். திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story