திருப்பத்தூர்– மதுரை ரோட்டில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை


திருப்பத்தூர்– மதுரை ரோட்டில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 11 Dec 2018 10:15 PM GMT (Updated: 11 Dec 2018 7:20 PM GMT)

திருப்பத்தூர்– மதுரை ரோட்டில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாசி வருகிறது. இதை சரி செய்ய வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குழாய் பதிக்கப்பட்டு குடிநீர் தினமும் காலை 1 மணி நேரம் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் குடிநீர் செல்லும் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. மருதுபாண்டியர் நகர், அச்சுக்கட்டுபகுதி, புதுத்தெரு, தென்மாபட்டு பகுதி ஆகிய இடங்களில் திடீர் என ஏற்படும் உடைப்புகளால் குடிநீர் அதிக அளவில் வீணாகி வருகிறது.

இதே போல் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுத்தெரு பகுதியில் மதுரைரோடு இணைப்பில் திடீரென காவேரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு எற்பட்டு தண்ணீர் வீணாக தாம்போதி ஆற்றில் கலக்கிறது. இதேபோல் மருதுபாண்டியரில் உள்ள ஒரு திருமண மண்டபம் எதிரேயும் பல நாட்களாக குழாயில் உடைப்பு ஏற்பட்டு இதுவரை சரிசெய்யப்படாததால், தண்ணீர் வீணாகி வருகிறது.

மேலும் இதுபோன்று பல்வேறு இடங்களிலும் உடைப்பை சரி செய்ய தாமதம் ஆவதால் அந்த பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து வெள்ளம் போல் ஓடுகிறது. இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகும் போது உடனடியாக சரிசெய்ய பேரூராட்சி நிர்வாகமோ, குடிநீர் வடிகால் வாரியமோ பழுது நீக்க முன்வருவதில்லை. இதனால் ஒரு வாரம் வரை குடிதண்ணீர் வழங்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.

இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தண்ணீர் வீணாகி வருவதோடு, அத்தியாவசியத் தேவைக்கு கூட தண்ணீர் தட்டுப்பாடு எழுந்துள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் துறை பராமரிப்பில் இருக்கும் இந்த குழாய்களை போர்கால அடிப்படையில் சரி செய்து முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story