சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்கார முயற்சி: கட்டிட மேஸ்திரிக்கு 10 ஆண்டு ஜெயில் - வேலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்கார முயற்சி: கட்டிட மேஸ்திரிக்கு 10 ஆண்டு ஜெயில் - வேலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 11 Dec 2018 10:15 PM GMT (Updated: 11 Dec 2018 7:26 PM GMT)

சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கட்டிட மேஸ்திரிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து வேலூர் விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

வேலூர், 

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா வரதலாம்பட்டு கிராமம் வெண்ணிலாபுரத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. அவருடைய மகன் ராஜ்குமார் (வயது 25), கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ந் தேதி அப்பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க வந்த 9 வயது சிறுமிக்கு மிட்டாய் (லாலிபாப்) வாங்கி கொடுத்துள்ளார். மேலும் அதிகமாக மிட்டாய் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை மோட்டார் சைக்கிளில் ராஜ்குமார் கடத்தி சென்று, அருகேயுள்ள மாந்தோப்பில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகேயுள்ள விவசாய நிலத்தின் உரிமையாளர் அங்கு வந்து, ராஜ்குமாரை பிடிக்க முயன்றார். ஆனால் அவர் அங்கிருந்து தப்பியோடினார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ராஜ்குமாரை கைது செய்து வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைத்தனர்.

இந்த வழக்கு குறித்த விசாரணை வேலூர் விரைவு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி செல்வம் விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அதில், சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதற்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் ராஜ்குமாருக்கு விதிக்கப்பட்டிருந்தது.

மேலும் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், அபராதத்தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 2 மாதம் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய நிவாரணம் வழங்கும்படி வேலூர் மாவட்ட சட்ட உதவி மையத்துக்கு நீதிபதி பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் லட்சுமிபிரியா ஆஜரானார். இதையடுத்து பலத்த காவலுடன் ராஜ்குமார் அழைத்து செல்லப்பட்டு வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். 

Next Story