பாம்பனில் புதிய ரோடு பாலம்; கடலுக்குள் நடந்து வரும் மண் ஆய்வு பணி
பாம்பனில் புதிய ரோடு பாலம் கட்டுவதற்காக கடலுக்குள் மண் ஆய்வு பணி நடந்து வருகிறது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரோடு பாலம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பாலத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் ராமநாதபுரம்–ராமேசுவரம் இடையே உள்ள இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு ஒப்புதல் வழங்கி அதற்கான அனுமதியும் வழங்கி உள்ளது.
ராமநாதபுரம்–ராமேசுவரம் இடையே நான்கு வழிச்சாலை வரும் போது பாம்பன் கடலுக்குள் புதிதாக பாலம் கட்ட வேண்டியது வரும். இதனால் பாம்பன் கடலுக்குள் புதிய ரோடு பாலம் கட்டுவதற்காக மன்னார் வளைகுடா பகுதியான தென் கடல் பகுதியில் பல இடங்களில் கடலுக்குள் துளையிட்டு மண் ஆய்வு பணி நடைபெற்று வருகிறது.
பாம்பன் தெற்குவாடி கடல் முதல் மண்டபம் கடற்கரை பூங்கா வரையிலும் மொத்தம் 31 இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ள, இந்த மண் ஆய்வு பணி, இது வரையிலும் 25 இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளன.
இந்தநிலையில் மண்டபம் கடற்கரை பூங்கா அருகே உள்ள கடல் பகுதியில் நேற்று மண் ஆய்வு பணி தீவிரமாக நடைபெற்றது. இதையடுத்து கடலுக்குள் நடந்து வரும் மண் ஆய்வு பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில இடங்களில் மட்டுமே ஆய்வு பணி நடைபெறவுள்ளதால், 10 நாட்களுக்குள் இந்த மண் ஆய்வு பணியை முழுமையாக முடிக்கவுள்ளதாக, ஆய்வு பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.