கடன் பிரச்சினை காரணமாக விடுதியில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை


கடன் பிரச்சினை காரணமாக விடுதியில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 11 Dec 2018 11:30 PM GMT (Updated: 11 Dec 2018 7:49 PM GMT)

கடன் பிரச்சினை காரணமாக தனியார் விடுதியில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

திருநெல்வேலி மாவட்டம் நடுவங்குறிச்சியை சேர்ந்தவர் செல்லதுரை. இவரது மகன் கிருஷ்ணவேல் (வயது 49). இவர் தனது மனைவி உமா(36), மகன், மகளுடன் சென்னை செனாய் நகரில் வசித்து வந்தார். கிருஷ்ணவேல் மணலியில் அலுமினிய பாத்திரம் தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். தொழிலை பெருக்குவதற்காக வங்கி மற்றும் தெரிந்தவர்களிடம் கிருஷ்ணவேல் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தொழிலில் போதிய லாபம் கிடைக்காததால் கிருஷ்ணவேலால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. மேலும் கிருஷ்ணவேலிடம் கடன் பெற்றவர்களும் அவருக்கு கடனை திருப்பி தரவில்லை என கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் தங்களது கடனை கிருஷ்ணவேலிடம் திருப்பி கேட்டுள்ளனர்.

மேலும் கிருஷ்ணவேலின் வீட்டின் வெளியே நின்று திட்டி அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தனது மனைவி மற்றும் மகளுடன் எழும்பூர் வீராசாமி தெருவில் உள்ள தனியார் விடுதிக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார். அங்கு தனது வீடு இடிந்துவிட்டது என்று கூறி அறை எடுத்து தங்கியுள்ளார்.

பின்னர் தனது மகள் தூங்கிய பின் கணவன், மனைவி இருவரும் பூச்சி மருந்து(விஷம்) குடித்துள்ளனர். நேற்று காலை கிருஷ்ணவேலின் மகள் தனது தந்தை மற்றும் தாயை எழுப்ப முயன்றார். ஆனால் அவர்கள் எழும்பவில்லை. இதனால் அவர் சத்தம்போட்டு கதறி அழுதுள்ளார். இதையடுத்து விடுதி ஊழியர்கள் கிருஷ்ணவேல் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு கணவன் மனைவி இருவரும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து விடுதி ஊழியர்கள் எழும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த எழும்பூர் இன்ஸ்பெக்டர் சேட்டு தலைமையிலான போலீசார் உடலை மீட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கிருஷ்ணவேல் தற்கொலைக் கான காரணம் குறித்து 3 பக்க கடிதம் கிடைத்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித் தனர்.

Next Story