மார்பிங் செய்து வீடியோ வெளியீடு பிற சாதி பெண்களை இழிவு படுத்தி பேசியவர் கொலையா? போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
பிற சாதி பெண்களை இழிவு படுத்தி பேசியவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீஸ் சூப்பிரண்டு பொன்னி பேட்டி அளித்தார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–
அம்பேத்கர் நினைவு நாள் கடந்த 6–ந்தேதி மப்பேடு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட நரசிங்கபுரம் கிராமத்தில் அனுசரிக்கப்பட்டது. அப்போது அதே பகுதியை சேர்ந்த அன்பழகன் என்பவர் பிற சாதி பெண்களை இழிவு படுத்தும் விதமாக பேசி அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இது தொடர்பாக மப்பேடு போலீசார் அன்பழகன் மற்றும் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களில் 3 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள அன்பழகனை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது அன்பழகன் பதிவேற்றம் செய்த வீடியோவையும், வேறொரு நபரின் துண்டிக்கப்பட்ட தலையையும் மார்பிங் மூலம் இணைத்து அன்பழகனின் தலை துண்டிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர்.
மேற்படி துண்டிக்கப்பட்ட தலையானது கடந்த 18–11–2018 அன்று நெல்லை மாவட்டம் தாழையூத்து உட்கோட்டம் சீவலப்பேரி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட மேலப்பாலமடை அம்மன் கோவில் எதிரில் உள்ள கலையரங்கம் உள்ளே கொலை செய்யப்பட்ட நபர் ராகவல்லிபுரம் தெற்கு தெருவை சேர்ந்த பால்துரை (வயது 18) என்பவருடையதாகும்.
பல்வேறு சமூகத்தினரிடையே விரோத மனப்பான்மையை தூண்டி சாதி மோதலை ஏற்படுத்தி சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கத்துடன் மார்பிங் செய்து மேற்படி வீடியோவை சமூக விரோதிகள் சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் யாரும் மேற்படி வதந்தியை நம்ப வேண்டாம்.
சமூக நல்லிணக்கத்தை பேணுவதற்கு காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேற்படி வீடியோவை வெளியிட்ட நபரை கண்டுபிடித்து அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.