பட்டாசு தொழிலை பாதுகாக்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வலியுறுத்தல்


பட்டாசு தொழிலை பாதுகாக்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 Dec 2018 4:45 AM IST (Updated: 12 Dec 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் பட்டாசு தொழிலை பாதுகாக்க மத்திய அரசு பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

விருதுநகர்,

விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் மேலும் கூறியதாவது:–

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா படுதோல்வி அடைந்துள்ளது. இந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா எப்படிப்பட்ட முடிவை சந்திக்கும் என்பதற்கு ஒரு எச்சரிக்கை மணி ஆகும். பாரதீய ஜனதாவை படுதோல்வி அடைய செய்த 5 மாநில வாக்காளர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன். வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் பாரதீய ஜனதா மற்றும் அ.தி.மு.க. கட்சிகளை வீழ்த்துவோம்.

பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர். சிவகாசி பட்டாசு தொழில், திருப்பூர் பணியன் தொழில், கோவை என்ஜினீயரிங் தொழில் ஆகியவற்றை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கவே மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு தேவையற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பட்டாசு தொழிலை பாதுகாக்க பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழப்பதற்கு முன்பே தமிழக அரசு அந்த ஆலையை மூடுவதற்கு ஆணை பிறப்பித்து இருக்கலாம். தற்போது தமிழக அரசு பிறப்பித்துள்ள ஆணையும் சட்டத்திற்கு ஈடு கொடுக்கும் நிலையில் இல்லை. தமிழக அரசு இது குறித்து கொள்கை முடிவு எடுத்து இருந்தால் இப்பிரச்சினையில் நீதிமன்றம் தலையிட்டு இருக்க முடியாது. பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் நியாயம் கிடைக்காது.

பட்டாசு ஆலைகளால் மாசு ஏற்படுகிறது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவிக்கும் நடைமுறை ஆலைகளை மூடும் நிலையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் ஸ்டெர்லைட் ஆலையால் மாசு ஏற்பட வில்லை என தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறுகிறது. இந்த முரண்பட்ட கருத்து ஏன்? என்று தெரியவில்லை. பட்டாசு தொழிலை பாதுகாக்க பொதுமக்களை சந்தித்து ஒரு மித்த குரலில் போராட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என அரசு முடிவு எடுத்துள்ளநிலையில் விருதுநகரில் மட்டும் அரசு மருத்துவ கல்லூரி தொடங்குவதில் தாமதம் ஏற்படுத்தப்படுகிறது. எனவே விருதுநகரில் அரசு மருத்துவ கல்லூரி தொடங்கப்பட வேண்டும். கஜா புயலில் பாதிக்கப்பட்டு வீடு இழந்தவர்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரண தொகை அவர்களது வங்கி கணக்கில் போடப்படுகிறது. அந்த தொகையை எடுப்பதற்கு பாதிக்கப்பட்ட மக்கள் 2 நாட்கள் காத்திருக்கவேண்டி உள்ளது. இந்த தொகையை அதிகப்படுத்த வேண்டும். கஜா புயல் நிவாரண நடவடிக்கையில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது.

இதனைத் தொடர்ந்து அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருடன் பேரணியாக கலெக்டர் அலுவலகம் சென்று மாவட்ட வருவாய் அதிகாரி உதயகுமாரிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அப்போது தலைமை செயலகத்திலும் வேறு எந்த கலெக்டர் அலுவலகத்திலும் இல்லாத நிலையில், விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பயோ மெட்ரிக் கதவினை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் நூர்முகமது, மாநிலக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், மகாலட்சுமி, மாவட்ட செயலாளர் அர்ஜுணன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story