ரெயில் நிலையங்களில் உரிமைகள் மறுக்கப்படுவதாக கோட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்
ரெயில் நிலையங்களில் உரிமைகள் மறுக்கப்படுவதாக கூறி, மதுரை கோட்ட மேலாளர் அலுவலகத்தை நேற்று மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மதுரை,
மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய சலுகைகளை ரெயில்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் தர மறுப்பதை கண்டித்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மதுரையில் நேற்று முற்றுகை போராட்டம் நடந்தது. இதற்காக மதுரை மற்றும் தென்மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் மதுரை கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு திரண்டனர்.
அவர்களை ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் முகைதீன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். அத்துடன், கோட்ட மேலாளர் அலுவலகத்துக்கு உள்ளே செல்லும் அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டன. ரெயில்வே ஆஸ்பத்திரிக்கு செல்லும் பிரதான வழியும் அடைக்கப்பட்டது.
இந்த போராட்டத்துக்கு சங்க மாநில செயலாளர் வில்சன் தலைமை தாங்கினார். பகத்சிங், முத்துக்காந்தாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தின் போது, மாற்றுத்திறனாளிகள் உரிமைசட்டம் கடந்த 2015–ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்த சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளது. தமிழக அரசும், இந்த சட்டத்தை அரசாணையாக வெளியிட மறுத்து வருகிறது. இதனை கண்டித்து, பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பறிக்கும் வகையில் மனிதாபிமானமற்ற முறையில் ரெயில்வே அமைச்சகம் நடந்து வருகிறது. மதுரை, நெல்லை, செங்கோட்டையில் இருந்து இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் நீக்கப்பட்டுள்ளது.
மதுரை ரெயில்நிலையத்தில் சக்கர நாற்காலிகளை தர மறுக்கின்றனர். பேட்டரி காருக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, ரெயில்நிலையங்கள் வாரியாக மாற்றத்திறனாளிகள் ஆலோசனைக்குழு அமைக்க வேண்டும். சலுகைக்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதற்காக சிறப்பு ரெயில்கள், சுவிதா எக்ஸ்பிரஸ் ரெயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை கட்டண டிக்கெட் வழங்குவதில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் ரெயிலின் எந்த பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறித்த அறிவிப்புகள் ரெயில் நிலையங்களில் தெரிவிப்பதில்லை. இந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
பின்னர் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்ட மேலாளர் நீனு இட்டியேராவிடம் மனு கொடுக்கப்பட்டது. அப்போது, தேசிய அளவிலான அரசின் கொள்கை முடிவுகளில் கோட்ட நிர்வாகம் தலையிட முடியாது. ரெயில்நிலையங்களில் உள்ள பிரச்சினைகளை எனது பார்வைக்கு கொண்டு வந்தால் உடனடியாக தீர்த்து வைக்கப்படும் என்று உறுதியளித்தார். அதனை தொடர்ந்து முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.