ஈரோடு கலெக்டர் வீட்டுக்கு இறந்த சிறுமியின் உடலை கொண்டு செல்ல முயன்றவர் கைது
இறந்த சிறுமியின் உடலை ஈரோடு கலெக்டர் வீட்டுக்கு கொண்டு செல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டார். போலீஸ் சோதனையை மீறி மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு,
ஈரோடு வ.உ.சி. பூங்கா அருகே நாட்ராயன்கோவில் பகுதியை சேர்ந்தவர் ராம் (வயது 45). இவருக்கு 4 மகள்கள் உள்ளனர். இதில் 3 மகள்கள் ஈரோடு அருகே முள்ளாம்பரப்பில் உள்ள ஒரு இல்லத்தில் தங்கி படித்து வருகிறார்கள். 4–வது மகள் வெள்ளியம்மாள் (3) நாமக்கல் மாவட்டம் மொளசியில் உள்ள இல்லத்தில் சேர்க்கப்பட்டாள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வெள்ளியம்மாளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அந்த சிறுமியை திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே வெள்ளியம்மாள் இறந்துவிட்டாள்.
இதுகுறித்து திருச்செங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், வெள்ளியம்மாளின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று அவளின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் உடலை தகனம் செய்வதற்காக ஈரோட்டிற்கு கொண்டு செல்வதாக போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர். அதன்பின்னர் ஒரு ஆம்புலன்சில் வெள்ளியம்மாளின் உடல் ஏற்றப்பட்டு அங்கிருந்து ஈரோட்டிற்கு புறப்பட்டனர்.
இதற்கிடையே வெள்ளியம்மாளின் உடலை வீட்டிற்கு கொண்டு செல்லாமல், சாவுக்கான காரணம் கேட்டு முறையிடுவதற்காக ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு செல்ல போவதாக ஈரோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின்பேரில் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரை சோதனை சாவடியில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தினார்கள். அங்கேயே வெள்ளியம்மாள் உடல் கொண்டு வரப்படும் ஆம்புலன்சை தடுத்து நிறுத்திவிடலாம் என்று போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். மேலும், ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
பள்ளிபாளையத்தில் இருந்து காவிரி ஆற்றுப்பாலத்தை கடந்து ஈரோட்டிற்கு வந்த அனைத்து வாகனங்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். ஆனால் வெள்ளியம்மாளின் உடல் கொண்டு வரப்பட்ட ஆம்புலன்ஸ் வரவில்லை.
இந்த நிலையில் ஈரோடு சம்பத்நகரில் உள்ள கலெக்டர் வீட்டிற்கு அருகில் ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வேகமாக வந்தனர். அந்த மோட்டார் சைக்கிளை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். அப்போது 2 பேருக்கும் இடையே போர்த்தி வைக்கப்பட்டு இருந்த துணியை அகற்றி போலீசார் பார்த்தனர். அப்போது, பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சிறுமியின் உடல் இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். காவிரிக்கரையில் போலீசாரின் சோதனையை மீறி உடலை ஈரோட்டிற்குள் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் மோட்டார் சைக்கிளில் உடலை கொண்டு வந்தது தெரியவந்தது.
அதன்பின்னர் உடலை கலெக்டரின் வீட்டிற்கு கொண்டு செல்ல முயன்றதாக ஈரோடு காசிபாளையம் மலைக்கோவில் காந்திஜி வீதியை சேர்ந்த பிரேம்நாத் (வயது 37) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் புரட்சி பாரத அமைப்பின் மாவட்ட செயலாளராக உள்ளார். மேலும், வெள்ளியம்மாளின் உடலை போலீசார் கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் அவளுடைய வீட்டில் ஒப்படைத்தனர். ஆஸ்பத்திரியில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுமியின் உடல் எவ்வாறு மோட்டார் சைக்கிளில் மாற்றப்பட்டது? எந்த இடத்தில் ஆம்புலன்சை நிறுத்தி மாற்றினார்கள்? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இறந்த சிறுமியின் உடலை ஈரோடு கலெக்டர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்ல முயன்ற சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.