பொதுமக்கள் உஷாராக இருக்கவேண்டும்: வங்கிக்கணக்கில் பணம் போடுவதாக மோசடிக்கு முயற்சி
புதுவையில் வங்கிக்கணக்கில் பணம் போடுவதாக கூறி மோசடி செய்ய முயற்சி நடந்து வருகிறது.
புதுச்சேரி,
புதுவையில் கடந்த சில நாட்களாக மர்ம நபர் ஒருவர் செல்போன்களில் பொதுமக்களை தொடர்பு கொண்டு வருகிறார். அவர், டெல்லியில் இருந்து பேசுவதாக தொடங்கி, பிரதமர் மோடி அறிவித்தபடி ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் போடும் திட்டம் அமலுக்கு வந்துள்ளதாகவும், அதில் முதல்கட்டமாக ரூ.50 ஆயிரம் உங்களது வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும் என்று கூறுகிறார்.
இதற்காக சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கிக்கணக்கு, ஏ.டி.எம். கார்டு நம்பர், அதன்பின்புறம் உள்ள நம்பர் ஆகியவற்றை கேட்கிறார். பின்னர் உங்கள் செல்போனுக்கு ஒரு முறை பயன்படுத்தப்படும் ரகசிய எண் (ஓ.டி.பி.) வரும் அதை சொல்லுங்கள் உடனடியாக உங்கள் வங்கிக்கணக்கில் பணம் சேர்க்கப்படும் என்று கூறுகிறார்.
குறிப்பாக உங்கள் வங்கிக்கணக்கில் பணம் இல்லாவிட்டால் அரசு வழங்கும் பணத்தை தரமுடியாது என்றும் கூறுகிறார். அவரிடம் இதுவரை தகவல்களை தெரிவித்து யாரும் பணத்தை இழந்ததாக தெரியவில்லை.
இருந்தபோதிலும் இதுபோன்று தொடர்புகொள்பவர்களிடம் யாரும் தகவல்களை தெரிவித்து ஏமாறாமல் இருக்க வேண்டும். முன்பு வங்கி மேலாளர் பேசுவதாக கூறி இதுபோன்று விவரங்கள் கேட்டு வங்கிகணக்கில் இருந்து பணம் திருடப்பட்டது. அதுகுறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டுள்ள நிலையில் இப்போது பிரதமர் மோடியின் பெயரை சொல்லி சிலர் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.