டிரைவரை சுட்டுக் கொன்று டாக்சியை கடத்திய கும்பல் வாலிபர் கொலை முயற்சி வழக்கில் சிக்கினர்


டிரைவரை சுட்டுக் கொன்று டாக்சியை கடத்திய கும்பல் வாலிபர் கொலை முயற்சி வழக்கில் சிக்கினர்
x
தினத்தந்தி 12 Dec 2018 2:56 AM IST (Updated: 12 Dec 2018 2:56 AM IST)
t-max-icont-min-icon

டிரைவரை சுட்டுக்கொன்று டாக்சியை கடத்திய 6 பேர் கும்பல், வாலிபரை கொல்ல முயன்ற வழக்கில் போலீசாரிடம் சிக்கியது.

தானே, 

தானேயை சேர்ந்தவர் அர்ஜூன் சர்கார்(வயது32). இவர் கடந்த சில தினங்களுக்கு முன் காசேலி பைப்லைன் பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சயான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரிடம் விசாரித்தனர். இதில் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் தன்னிடம் பணம் பறிப்பதற்காக தனது உறவினர் துலால் மண்டல் (29) என்பவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து தன்னை கடத்தி துப்பாக்கியால் சுட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் துலால் மண்டலை கைது செய்தனர். மேலும் அவரின் கூட்டாளிகளான ஹுராமன்(40), பிரமோத்(30), ராஜேஷ்(30), பிரபாகர் சிங்(22), இந்த கும்பலின் தலைவனான ஜெய்சிங் தாக்குர்(34) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 4 அரிவாள்கள், 4 துப்பாக்கிகள், 31 தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கும்பல் கடந்த மாதம் 23-ந்தேதி சாகாப்பூரை சேர்ந்த டாக்சி டிரைவர் அரவிந்த் திக்சித் என்பவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்து உடலை காட்டுப்பகுதியில் வீசிவிட்டு அவரது டாக்சியை கடத்திய அதிர்ச்சி தகவலும் அம்பலமானது.

இதைத்தொடர்ந்து போலீசார் 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவர்களை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது. 

Next Story