தனியாக நடந்து சென்ற 3 பெண்களிடம்: போலீஸ்போல் நடித்து நகை மோசடி செய்தவருக்கு 2 ஆண்டு சிறை - கோவை கோர்ட்டு தீர்ப்பு
கோவையில் தனியாக நடந்து சென்ற 3 பெண்களிடம் போலீஸ்போல் நடித்து நகை மோசடி செய்தவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.
கோவை,
ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டம் குண்டக்கல் கங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் ஷேக் அலிகான் (வயது 48). இவர் கடந்த 2016-ம் ஆண்டு கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடந்து சென்ற ஒரு பெண்ணிடம் தான் போலீஸ் என்று கூறியதுடன், இந்த பகுதியில் திருட்டு அதிகமாக நடப்பதால், கழுத்தில் அணிந்திருக்கும் நகையை கொடுங்கள், நான் காகிதத்தில் வைத்து கொடுக்கிறேன் என்று கூறி நகையை அபேஸ் செய்தார்.அதுபோன்று மேலும் 2 பெண்களிடம் நகையை மோசடி செய்தார். இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் ஷேக் அலிகான் மீது போலீஸ் என்றுக்கூறி ஏமாற்றுதல், மோசடி செய்தல், சதித்திட்டம் தீட்டுதல் ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
தலைமறைவாக இருந்த அவரை ஆந்திரா சென்று போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை 1-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
அதன்படி போலீஸ் என்று கூறி ஏமாற்றிய பிரிவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், நகையை மோசடி செய்ததற்கு 2 ஆண்டும், சதித்திட்டம் தீட்டியதற்கு 2 ஆண்டும் இந்த சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் மாஜிஸ்திரேட்டு குமரசிவம் தீர்ப்பளித்தார்.
இது குறித்து வக்கீல் கூறும்போது, ‘நகை மோசடி செய்த வழக்கில் ஷேக் அலிகான் மீது 3 பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டு அந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டு தீர்ப்பு கூறி உள்ளதால் அவர் 2 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்தால் போதும்’ என்றார்.
Related Tags :
Next Story