கோவை அருகே: கைதான மாவோயிஸ்டுகள் 5 பேர் கோர்ட்டில் ஆஜர்


கோவை அருகே: கைதான மாவோயிஸ்டுகள் 5 பேர் கோர்ட்டில் ஆஜர்
x
தினத்தந்தி 11 Dec 2018 10:00 PM GMT (Updated: 11 Dec 2018 10:03 PM GMT)

கோவை அருகே கைதான மாவோயிஸ்டுகள் 5 பேர் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கோவை,

கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டியில் கடந்த 2015-ம் ஆண்டு ரூபேஷ், சைனா, அனூப், கண்ணன், வீரமணி ஆகிய 5 மாவோயிஸ்டுகளை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் ரூபேஷ் மீது கேரள மாநிலத்தில் ஏராளமான வழக்குகள் இருப்பதால், அங்குள்ள கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்துவதற்கு வசதியாக கேரள சிறைக்கு மாற்றப்பட்டார். சைனா நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அனூப், கண்ணன், வீரமணி ஆகிய 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டது, போலி முகவரி கொடுத்து சிம்கார்டுகள் வாங்கியது உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகள் கோவை மாவட்ட நீதி மன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தது.

அப்போது கேரள சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ரூபேஷ், கோவை சிறையில் உள்ள அனூப், கண்ணன், வீரமணி ஆகியோர் பலத்த பாதுகாப்புடன் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதுபோன்று ஜாமீனில் விடுதலையான சைனாவும் கோர்ட்டில் ஆஜரானார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சக்திவேல், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஜனவரி) 10-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் ரூபேசை பலத்த பாதுகாப்புடன் கேரளா அழைத்து சென்றனர். அதுபோன்று அனூப், கண்ணன், வீரமணி ஆகியோர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

முன்னதாக கோவை கோர்ட்டுக்கு மாவோயிஸ்டுகள் வந்தபோது, இந்தியாவில் மாவோயிஸ்டுகளை அடக்க முடியாது, மாவோயிஸ்டுகள் அடக்குமுறையை முறியடிப்போம் என்று கோஷம் எழுப்பினார்கள்.

பின்னர் பெண் மாவோயிஸ்டு சைனா நிருபர்களிடம் கூறியதாவது:-

இதய நோயால் எனது தாயார் பாதிக்கப்பட்டு உள்ளார். அவரையும், எனது குழந்தைகளையும் கவனித்து கொள்வதற்காகதான் எனக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் கோவை, திருப்பூர் கோர்ட்டில் நான் தினமும் கையெழுத்து போட வேண்டும். இதனால் கேரளாவில் இருந்து தினமும் வந்து செல்ல கடினமாக இருக்கிறது.

கோவை அல்லது திருப்பூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கலாம் என்று வீடு தேடிசென்றால் போலீசார் பின்தொடர்ந்து வந்து நான் சென்ற வீடுகளில் விசாரிக்கிறார்கள். இதனால் எனக்கு யாருமே வாடகைக்கு வீடு கொடுக்க முன்வருவது இல்லை. எனவே இந்த பிரச்சினைகளில் இருந்து எனக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story