நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் ரூ.1.85 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் - கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு


நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் ரூ.1.85 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் - கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு
x
தினத்தந்தி 12 Dec 2018 5:00 AM IST (Updated: 12 Dec 2018 3:41 AM IST)
t-max-icont-min-icon

நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் ரூ.1 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மங்களபுரம், ஈஸ்வரமூர்த்திபாளையம், ஆயில்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதையொட்டி மங்களபுரம் ஊராட்சி, அணைபாளைத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு உள்ள ரேஷன் கடை கட்டிடத்தையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் ஊத்துப்புளிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு உள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தண்டாகவுண்டம்பாளையம் முதல் ஊத்துப்புளிக்காடு வரை 800 மீட்டர் நீளத்திற்கு சாலை மேம்படுத்தப்பட்டு உள்ள பணியினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் சாலை பணியினையும் பார்வையிட்டார்.

இதேபோல் ஈஸ்வரமூர்த்திபாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு உள்ளதையும், ஆயில்பட்டி ஊராட்சியில் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கப்பட்டு இருப்பதையும் என மொத்தம் ரூ.1 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தா, செந்தில்வேல் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Next Story