அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம் மராட்டிய மந்திரி சபையில் முடிவு
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம் வழங்குவது என மராட்டிய மந்திரி சபையில் முடிவு செய்யப்பட்டது.
மும்பை,
மராட்டிய மந்திரிசபை கூட்டம் நேற்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம் வழங்குவது என முடிவு செய்யப்பட் டது. குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள குழந்தைகள் நல பரிசு பெட்டகம் வழங்கப்படும். முதல் குழந்தைக்கு மட்டும் இந்த பரிசு பெட்டகம் பொருந்தும்.
இந்த பரிசு பெட்டகத்தில் குழந்தைகளின் உடைகள், பிளாஸ்டிக் டைபர், மெத்தை, துண்டு, தெர்மோமீட்டர், மசாஜ் எண்ணெய், கொசு வலை, போர்வை, பிளாஸ்டிக் தரைவிரிப்பு, சாம்பு, பொம்மை, நகவெட்டி மற்றும் சாக்ஸ் ஆகியவை அடங்கியிருக்கும்.
மராட்டியத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 20 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. இதில் கிட்டத்தட்ட 10 லட்சம் குழந்தைகள் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தான் பிறக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே தமிழ்நாடு, ஆத்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதுமட்டும் இல்லாமல், “முதல்-மந்திரி கிரிஷி சிஞ்சாயே யோஜனா” திட்டத்தின் கீழ் 48 திட்டங்களை செயல்படுத்த வேளாண் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு வங்கியிடம்(நபார்டு) இருந்து ரூ.6 ஆயிரத்து 985 கோடி கடன்பெற மந்திரி சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story