ரூ.78½ கோடியில் மேம்படுத்தப்படுகிறது நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் தடுப்புச்சுவர் அகற்றம்


ரூ.78½ கோடியில் மேம்படுத்தப்படுகிறது நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் தடுப்புச்சுவர் அகற்றம்
x
தினத்தந்தி 12 Dec 2018 2:38 PM IST (Updated: 12 Dec 2018 2:38 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை மேம்படுத்துவதற்காக தடுப்புச்சுவர் அகற்றும் பணி நேற்று நள்ளிரவு தொடங்கியது.

நெல்லை, 

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை மேம்படுத்துவதற்காக தடுப்புச்சுவர் அகற்றும் பணி நேற்று நள்ளிரவு தொடங்கியது.

மேம்படுத்தும் பணி

நெல்லை மாநகராட்சி ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் சந்திப்பு பஸ்நிலையம் ரூ.78½ கோடியில் மேம்படுத்தப்படுகிறது. இதையொட்டி பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கடைகளை காலி செய்ய மாநகராட்சி உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் பஸ் நிலைய வளாகத்தில் இருந்த அம்மா குடிநீர் விற்பனை கடையை நேற்று நள்ளிரவு போக்குவரத்து கழக அதிகாரிகள் அகற்றி, லாரியில் எடுத்துச் சென்றனர். இதே போல் பஸ் நிலைய வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த விளம்பர தொலைக்காட்சிபெட்டிகள், அறிவிப்பு ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டன. மேலும் விளம்பர பலகைகள், இரும்பு கம்பங்களும் மின்சாதனங்கள் மூலம் வெட்டி அகற்றப்பட்டன.

தடுப்புச்சுவர் இடிப்பு

இதை தொடர்ந்து நெல்லை மாநகராட்சி சார்பில் பொக்லைன் எந்திரம் மற்றும் லாரி பஸ் நிலைய வடக்கு பகுதியில் தென்காசி பஸ்கள் நின்று செல்லும் பிளாட்பாரத்துக்கு கொண்டு வரப்பட்டன. அங்குள்ள தடுப்பு சுவரை இடித்து அகற்றி லாரியில் அள்ளிச்சென்றனர். பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதியில் வெளியூர் பஸ், வாகனங்கள் ஒரு வழிப்பாதை திட்டத்தின் கீழ் வந்து செல்ல வசதியாக இந்த சுவர் இடிக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

தற்காலிக பஸ் நிறுத்தங்கள்

பஸ் நிலைய கட்டுமான பணியால், பயணிகள் பாதிப்பு இன்றி செல்வதற்காக பஸ்கள் எங்கெங்கு நின்று செல்லும் என இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதுதவிர சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றியும் தற்காலிக பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்படுகிறது. சந்திப்பு பஸ்நிலையத்தின் மேல்புறத்தில் அமைந்துள்ள பேக்கரி முன்பும், வடபுறமான தென்காசி பஸ்நிறுத்தம், கீழ்புறமான கெட்வெல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள திருப்பம் மற்றும் அங்கிருந்து சற்று தூரத்திலும் தற்காலிக பஸ்நிறுத்தங்கள் அமைக்கப்படுகிறது. இதையொட்டி அங்கு பயணிகள் நிழற்குடை அமைக்க நேற்று பள்ளம் தோண்டப்பட்டது.

கலெக்டரிடம் மனு

இந்த நிலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி வர்த்தகர் அணி நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் சாகுல் அமீது உஸ்மானி தலைமையில் வியாபாரிகள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் ஷில்பாவை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், “நெல்லை சந்திப்பு பஸ் நிலைய சீரமைப்புபணிக்காக பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கடைகளை காலி செய்ய மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. கடைகளை காலி செய்ய முறையாக அறிவிப்பு கொடுத்து, போதிய கால அவகாசம் வழங்க வேண்டும். தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை கால வியாபாரத்தை கருத்தில் கொண்டும், பயணிகளின் நலன் கருதியும் கடைகளை காலி செய்ய வருகிற 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை கால அவகாசம் வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது.

Next Story