கயத்தாறு அருகே பயங்கரம் கிறிஸ்தவ மத போதகர் வெட்டிக் கொலை சொத்து பிரச்சினையில் ஆட்டோ டிரைவர் வெறிச்செயல்
கயத்தாறு அருகே சொத்து பிரச்சினையில் கிறிஸ்தவ மத போதகரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த ஆட்டோ டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கயத்தாறு,
கயத்தாறு அருகே சொத்து பிரச்சினையில் கிறிஸ்தவ மத போதகரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த ஆட்டோ டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கிறிஸ்தவ மத போதகர்
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ராஜாபுதுக்குடி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா கோயில்பிள்ளை (வயது 60). இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடலூரில் கிறிஸ்தவ மத போதகராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ராணி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
ராஜா கோயில்பிள்ளையின் அண்ணன் பால் தங்கசாமி. இவர் குடிநீர் வடிகால் வாரியத்தில் ஊழியராக பணியாற்றினார். இவருடைய மகன் ராஜா (32). ஆட்டோ டிரைவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பால் தங்கசாமி, அவருடைய மனைவி ஆகியோர் இறந்து விட்டனர். எனவே ராஜாபுதுக்குடியில் உள்ள பூர்வீக வீட்டில் ராஜா மனைவியுடன் வசித்து வருகிறார்.
சொத்து பிரச்சினை
இந்த நிலையில் ராஜா கோயில்பிள்ளைக்கும், ராஜாவுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது. இதுகுறித்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. ராஜா கோயில்பிள்ளை அடிக்கடி தனது சொந்த ஊருக்கு சென்று, தனது நிலங்களை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல் சொந்த ஊரில் உள்ள தனது நிலங்களை பார்ப்பதற்கு தனியாக புறப்பட்டு வந்தார்.
நேற்று மதியம் அவர், ராஜாவின் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர்களுக்கு இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.
வெட்டிக்கொலை
அப்போது ஆத்திரம் அடைந்த ராஜா திடீரென அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினார். இதில் தலை, கழுத்து, மார்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் வீட்டுக்குள் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் ராஜா அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கயத்தாறு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
போலீஸ் வலைவீச்சு
கொலை செய்யப்பட்ட ராஜா கோயில்பிள்ளையின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ராஜாவை தேடி வருகின்றனர்.
சொத்து பிரச்சினையில் கிறிஸ்தவ மத போதகர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story