வாணியம்பாடி அருகே பிளஸ்–1 மாணவிக்கு 33 வயது வாலிபரை திருமணம் செய்து வைக்க முயற்சி அதிகாரிகள் தடுத்து போலீசில் ஒப்படைத்தனர்
வாணியம்பாடி அருகே 16 வயது சிறுமியை 33 வயது வாலிபருக்கு திருமணம் செய்ய இருந்ததை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து இருவரும் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
வாணியம்பாடி,
வாணியம்பாடி அருகே உள்ள கூத்தாண்டகுப்பம் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி பிளஸ்–1 படித்து வருகிறார். இவரது தாய் மாமாவின மகன் ஆனந்தன் (வயது 33), தமிழக எல்லைப்பதியில் உள்ள குருபவானி குண்டா கிராமத்தில் வசிக்கிறார். இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர்.
ஆனால் மணமகளான மாணவிக்கு 18 வயது நிரம்பவில்லை. 18 வயது நிரம்பாத பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றமாகும். இந்த நிலையில் இவர்களது திருமணம் நாட்டறம்பள்ளியில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலில் நடத்தவும், அதனை தொடர்ந்து மற்ற நிகழ்ச்சிகளை எதிரே உள்ள மண்டபத்தில் நடத்தவும் இருவீட்டாரும் முடிவு செய்திருந்தனர்.
இநத் நிலையில் குழந்தை திருமணம் நடத்தப்படுவது குறித்து நாட்டறம்பள்ளி தாசில்தாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தாசில்தார் குமார் மற்றும் சமூக நலத்துறை அலுவலர்கள் அங்கு சென்று திருமணத்தை தடுத்தனர்.
பின்னர் ஆனந்தன் மற்றும் அவர் திருமணம் செய்ய இருந்த பிளஸ்–1 மாணவியை அதிகாரிகள், வாணியம்பாடி அருகே உள்ள திம்மாம்பேட்டை போலீசாரை வரவழைத்து ஒப்படைத்தனர்.
இருவரின் பெற்றோரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். 18 வயது நிரம்பாத பெண்ணுக்கு திருமணம் செய்தால் பெற்றோர் மற்றும் உடந்தையாக இருப்பவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க நேரிடும் என எச்சரித்தனர். இதனையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது. திருமணத்துக்கு வந்த உறவினர்கள் திரும்பச்சென்றனர்.