குளத்தில் குளித்துகொண்டிருந்த பெண்ணிடம் 5¾ பவுன் நகை பறிப்பு மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு


குளத்தில் குளித்துகொண்டிருந்த பெண்ணிடம் 5¾ பவுன் நகை பறிப்பு மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 12 Dec 2018 10:15 PM GMT (Updated: 12 Dec 2018 3:03 PM GMT)

இரணியல் அருகே குளத்தில் குளித்து கொண்டிருந்த பெண்ணிடம் 5¾ பவுன் நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

திங்கள்சந்தை,

இரணியல் போலீஸ் சரகம் பரசேரி அருகே உள்ள இடமருவத்தூர் பகுதியை சேர்ந்தவர் முருகன், தொழிலாளி. இவருடைய மனைவி சுனிதா(வயது 44). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

 நேற்று காலையில் சுனிதா, வீட்டின் அருகில் உள்ள செல்லாங்குளத்துக்கு குளிக்க சென்றார். அப்போது, அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த ஒரு மர்ம ஆசாமி குளக்கரை பகுதிக்கு வந்ததும் மோட்டார்சைக்கிளை ஸ்டாட் செய்த நிலையில் நிறுத்தினார்.

 பின்னர், குளத்துக்குள் குளித்துக்கொண்டிருந்த சுனிதாவை நோக்கி வேகமாக சென்று அவர், அணிந்திருந்த 5½ பவுன் தங்க சங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுனிதா, திருடன்... திருடன்... என்று அலறினார். இருந்தாலும் அந்த மர்ம ஆசாமி சுனிதாவின் காதில் கிடந்த ¼ பவுன் தங்க வளையத்தையும் பறிக்க முயன்றார். சுதாரித்து கொண்ட சுனிதா அந்த மர்ம ஆசாமியுடன் போராடினார். ஆனாலும், ஆசாமி வளையத்தை பறித்தார். இதற்கிடையே சுனிதாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் குளக்கரையில் தயாராக நிறுத்தி இருந்த மோட்டார்சைக்கிளில் ஏறி மின்னல் வேகத்தில் மர்ம ஆசாமி தப்பிச்சென்று விட்டான்.

இந்த சம்பவத்தில், சுனிதாவின் ஒரு பக்க காது அறுந்து ரத்தம் வழிந்தது. 

இதுகுறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுனிதாவிடம் விசாரணை நடத்தி அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமியை வலைவீசி தேடிவருகிறார்கள்.

பட்டப்பகலில் குளத்தில் குளித்து கொண்டிருந்த பெண்ணிடம் 5¾ பவுன் நகையை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story